Show all

கிண்டல் வாசகங்களோடு, எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் வந்து விழுந்த 2000 போலி ரூபாய் தாள்கள்

டெல்லியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் ரூ.2000 போலி ரூபாய் தாள்கள் வந்ததோடு அதில் ரிசர்வ் வங்கி என்பதற்கு பதிலாக குழந்தைகள் வங்கி என்று அச்சடிக்கப்பட்டிருந்ததை அடுத்த பரபரப்பு நிலவியது.

     பழைய ரூ.500, ரூ.1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் நடுவண் அரசு திடீரென அறிவித்தது. இந்நிலையில் புதிய ரூ.2000 ரூபாய் தாள்களை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.

     அந்த ரூபாய் தாள்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டதால் போலி ரூபாய் தாள்களை எவராலும் அச்சடிக்க முடியாது என்று நடுவண் அரசு பெருமிதம் கொண்டது.

     இந்நிலையில் ரூ.2000 ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தத் தொடங்கிய காலத்தில் ஏடிஎம் மையங்களில் போலி ரூபாய் தாள்கள் வந்தன, சின்னங்கள் இல்லாதிருப்பது, ரூபாய் தாள்கள் ஒருபுறம் வெற்று காகிதமாக இருந்தது உள்ளிட்ட புகார்களுடன் ரூபாய் தாள்கள் வந்தன.

     இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த ரோஹித் குமார் என்பவர் கடந்த 6-ஆம் தேதி டெல்லி சங்கம் விஹாரில் உள்ள ஏடிஎம் மையத்தில் ரூ.8,000 எடுத்தார். அதில் வந்த 4 எணணிக்கையிலான ரூ.2,000 ரூபாய் தாள்கள் அனைத்தும் போலியானவை என தெரியவந்தது.

     இதுதொடர்பாக டெல்லி காவல்துறையினரிடம் ரோஹித் புகார் அளித்தார். அதன்பேரில் குறிப்பிட்ட ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்த காவல்துறையினருக்கும் அதுபோன்ற போலி ரூபாய்தாள்களே வந்தன. ஆனால் ஏடிஎம் மையத்தில் இருந்த ரூபாய்தாள் கட்டுகளில் இருந்த அனைத்து ரூ.2000 ரூபாய்தாள்களும் நல்ல ரூபாய்தாள்களாகவே இருந்தன. இதனால் காவல்துறையினர் விழிபிதுங்கி நின்றனர். உடனே சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

     பின்னர் இரு ரூபாய்தாள்களையும் ஒப்பிட்டு பார்த்தபோது காவல்துறையினரும், வங்கி ஊழியர்களும் அதிர்ந்தனர். போலி ரூபாய்தாளில் குழந்தைகள் வங்கி என்றும், ஆர்பிஐ முத்திரைக்கு பதில் பி.கே. என்ற முத்திரையும், அசோக சக்கரம் இருக்கும் இடத்தில் ஏதோ ஒரு வாசகமும், நடுவண் அரசு உத்தரவாதம் என்ற இடத்தில் குழந்தைகள் அரசு உத்தரவாதம் என்று அச்சிடிப்பட்டு இருந்தது.

     மேலும் அந்த போலி ரூபாய்தாள்களில் இந்திய கரன்சி குறியீடுகள் காணப்படவில்லை. பாரதிய ரிசர்வ் வங்கி என்பதற்கு பதிலாக பாரதிய மனோரஞ்சன் வங்கி என்றும், ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்து இல்லாமலும் இருந்தன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.