எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்குக் கோரியபோது,
பன்னீர்செல்வம் உட்பட அவரது அணியினர் 11 பேர் எதிராக வாக்களித்தனர். கோவை வடக்கு தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் வாக்கெடுப்பைப் புறக்கணித்தார். ‘கட்சித் தாவல் தடைச்
சட்டத்தின்படி இந்த 12 பேரின் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படுமா?’ என்ற கேள்வி
இப்போது எழுந்திருக்கிறது. கட்சிக்
கொறடாவின் உத்தரவை மீறியதால் இவர்கள் பதவியை பேரவைத் தலைவர் பதவி பறிக்கலாம் என்பது
விதி. ஆனால், ‘‘கொறடாவின் உத்தரவை மீறினாலும்,
இவர்கள் தங்கள் கட்சிக்கு எதிராகத்தான் வாக்களித்தார்கள். வேறு ஒரு கட்சிக்கு ஆதரவாக
வாக்களிக்கவில்லை. அதனால், இந்தச் செயல் ‘கட்சி தாவல் தடைச் சட்ட’
வரம்புக்குள் வராது. எனவே, இவர்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவி
பறிபோகாது’’ என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். கடந்த
2010-ம் ஆண்டு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்குக் கோரினார்.
அப்போது அவரின் கட்சியான பாஜகவினர்- உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்களை கட்சி தாவல் தடைச்
சட்டப்படி பதவியிலிருந்து நீக்கினார் பேரவைத்தலைவர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குப்
போனது. 2011-ம் ஆண்டில், அப்போதைய தலைமை நீதிஅரசர் அல்டமாஸ் கபீர் தலைமையிலான அமர்வு,
‘இவர்கள் தங்கள் கட்சி அரசு, கவிழ வேண்டும் என நினைக்கவில்லை. எடியூரப்பா என்ற நபர்
முதல்வராகத் தொடர்வதையே எதிர்த்தார்கள். அதற்காக இவர்களின் சட்டமன்ற உறுப்பினர்களின்
பதவியைப் பறிக்கக்கூடாது’ என்றது அந்தத் தீர்ப்பு. இதை
முன்னுதாரணமாக வைத்து, ‘எடப்பாடி என்ற நபருக்கு எதிராக வாக்களித்தோம்’
என இவர்கள் சொல்லலாம். இப்போதைய
சூழலில், இந்த 12 பேரின் பதவியைப் பறிக்க அதிமுகவினருக்கே சம்மதம் இல்லை எனச் சொல்லப்படுகிறது.
அப்படிச் செய்தால், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலோடு சேர்த்து, இந்த 12 தொகுதிகளுக்கும்
இடைத்தேர்தல் வரும். பன்னீர் செல்வமும், திமுகவும்
மக்களைக் குழப்புவதற்கே அதிக வாய்ப்பு உள்ள நிலையில் இடைத்தேர்தலில் எதிரொலித்தால்,
எதிர்க்கட்சிகள் வலிமையாகிவிடும். இப்போது நூலிழை பெரும் பான்மையில்தான் நாம் இருக்கிறோம்’
என்று டி.டி.வி.தினகரன் சொல்லியிருக்கிறார். இந்த
12 பேரில் ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன் ஆகிய இருவரை மட்டுமே கட்சியிலிருந்து
நீக்கியிருக்கிறார் சசிகலா. மற்ற 10 பேரும், இன்னமும் அ.தி.மு.க-வில்தான் இருக்கிறார்கள்.
அவர்களை சரிக்கட்டி மீண்டும் தங்கள் முகாமுக்கு இழுக்கும் முயற்சிகளையும் அதிமுக செய்துவருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



