13,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆதார் எண்ணைத் தருகிறேன், முடிந்தால் எனது தகவல்களை திருடுங்கள் என இந்திய தொலை தொடர்பு ஆணையரான டிராயின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா கீச்சுப்பக்கத்தில் அவரது 12 இலக்க ஆதார் எண்ணை வெளியிட்டு சவால் விடுத்தார். ஆதார் எண் வெளியான சில மணி நேரத்திலேயே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹேக்கர்கள் ராபர்ட் பேப்டிஸ்ட் என்று அழைக்கப்படும் எலியாட் ஆண்டர்சன், கனிஷ்க் சஞ்சானி மற்றும் கரண் சய்னி ஆகியோர் பதிலளித்துள்ளனர். ஆர்.எஸ்.சர்மாவின் முகவரி, பிறந்தநாள், தொலைபேசி எண், பான் எண் போன்ற தகவல்கள் வரிசையாக பதிவிடப்பட்டன. அத்துடன் உங்கள் ஆதார் எண் எந்த வங்கிக் கணக்குடனும் இணைப்பு செய்யப்படவில்லை என்றும் கீச்சு போடப்பட்டது. அந்தத் தொலைபேசி எண் தன்னுடையது அல்ல என டிராய் தலைவர் மறுக்க அது உங்களுடைய உதவியாளருடையது என பதில் கீச்சு வந்தது. இதனிடையே தற்போது இந்த கீச்சுப் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் மூலம் நாட்டு மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அரசின் பெரும்பாலான நலத்திட்டங்களைப் பெற ஆதார் அட்டையைக் கட்டாயமாக்க அரசு முயன்று வருகிறது. இந்தச்சூழலில், ஆதார் அட்டைக்காகப் பெறப்பட்டுள்ள தனிப்பட்ட தகவல்கள், திருடப்பட்டால், அது குடிமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்று கூறி உச்ச அறங்கூற்று மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இதுதவிர, ஆதார் அட்டைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ஒன்றிணைத்து உச்ச அறங்கூற்று மன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. பொதுமக்களின் ஆதார் தகவல்கள் 13 அடி அகலம் கொண்ட கான்கிரீட் சுவர் கொண்ட அறையில் பாதுகாக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் உச்ச அறங்கூற்று மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அது இணையத்தில் கடுமையாக கிண்டல் செய்யப் பட்டு வருகிறது. ஆதார் அரசியல் சாசன அமர்வு வழக்கில் இந்த நிகழ்வுகள் முன்வைக்கப் படவேண்டும் என்பது மக்கள் விருப்பம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,863.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



