Show all

இல.கணேசன் சப்பைக்கட்டு! இராணுவ விமானத்தை பயன்படுத்த நிர்மலா சீதாராமன், தன்னிச்சையான அனுமதி சின்ன விதிமீறலாம்

13,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்திக்க மறுத்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. நேரம் கிடைக்காமலும், சில தவிர்க்க இயலாத காரணங்களாலும் சந்திப்பு நிகழாமல் இருந்திருக்கலாம். என்ன நடந்தது என நிர்மலா சீதாராமன் அவர்களே சொல்லுகிற வரை அதனுடைய பின்னணி என்னவென்று தெரியாது. ஒரு துணை முதலமைச்சரை அவமானப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் பா.ஜ.கவுக்கு இல்லை என்று இல.கணேசன் இதழியலாளர்களிடம் தெரிவித்தார். 

பன்னீர் செல்வம் தம்பிக்கு உடல்நிலை சரியில்லாத போது, அவசர மருத்துவ உதவிக்காக ராணுவ விமானத்தை நடுவண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கியது என்பது பெருந்தன்மையான விசயம். இதில் என்ன தவறு இருக்கிறது. இது விதியில் ஏற்பட்டிருக்கின்ற ஒரு சின்ன விதிமீறல் தான். இது ஒன்றும் சட்டவிரோதமோ, தவறோ, துரோகமோ, முறைகேடோ இல்லை. அவசரத்துக்கு விமானத்தைப் பயன்படுத்தக் கொடுத்தது மனிதாபிமானம். இதற்காக அமைச்சரை பாராட்டவேண்டும் என அதிரடித்தார்.

ஒரு நாள் ஏதாவதொரு அறங்கூற்று மன்ற வாயிலில் போய் நின்று பாருங்கள். இதை விட சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் ஆண்டுக் கணக்காக அரங்கூற்று மன்ற படியேறும் அப்பாவிகளின் எண்ணிக்கை எத்தனை? துயரம் எவ்வளவு? என்பதைத் தெரிந்து கொள்ளலாம் இல.கணேசன்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,863.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.