குமுறுகிறார் திருமுருகன் காந்தி: தமிழ்நாட்டின் வரி நிலுவையை கொடுக்காத மோடி அரசு, கொரொனோ நெருக்கடிக்கான அவசர உதவி தொகையை கொடுக்காத அரசு, குஜராத்தி மார்வாடிகளுக்கு நம் பணத்தை படியளக்கிறது. அனைத்து மக்களின் சேமிப்பு பணத்தை இவர்களுக்கு தாரை வார்க்கிறது. 16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சாகேத் கோகலே என்பவர், இந்தியாவில் வங்கி கடன் மோசடி பட்டியலில் முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு இந்தியக்கட்டுப்பாட்டு வங்கியிடம் முழுப்பட்டியலும் பெற்று வெளியிட்டுள்ளார். இந்த மனக்குமுறல் இந்தியாவில் அனைத்து தரப்பினரையும் இன்று காலையிலிருந்து பேசி புலம்ப வைத்திருக்கின்றது. சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய வங்கிகளில் அதிக அளவு கடன் பெற்று திருப்பி செலுத்தாத 50 பேரின் பட்டியல் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு ஆளுங்கட்சியினர் பலமாக எதிர்ப்பு தெரிவித்து அமளியில் இறங்கினர் என்பதும் பலராலும் நினைவுகூறப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும் கீச்சு மேல் கீச்சுக்களை போட்டு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார். அந்தக் கீச்சுகள் இவைதாம்:- (!) தமிழ்நாட்டின் வரி நிலுவையை கொடுக்காத மோடி அரசு, கொரொனோ நெருக்கடிக்கான அவசர உதவி தொகையை கொடுக்காத அரசு, குஜராத்தி மார்வாடிகளுக்கு நம் பணத்தை படியளக்கிறது. அனைத்து மக்களின் சேமிப்பு பணத்தை இவர்களுக்கு தாரை வார்க்கிறது. (!) தமிழ்நாடு சிறு-குறு தொழிலால் வளர்ந்த மாநிலம். தமிழகத்தின் பல நூறு நகரங்கள் இத்தொழிலால் வளர்ந்தன. இதை சரக்குசேவைவரி சீரழித்தது. இந்த வரியில் தமிழகத்தின் பங்கை இதுவரை கொடுக்காத மோடி அரசு , மார்வாடிகளுக்கு அனைத்து உதவிகளும் செய்கிறது. (!) பாஜகவின் தமிழின வெறுப்பையும், மார்வாடி பாசத்தையும் அம்பலப்படுத்தும் தோழர்களுக்கு வாழ்த்துகள். தமிழர்களே எச்சரிக்கை. உங்களை ஹிந்து முஸ்லீம் என பிரித்து நடுவில் மார்வாடிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறார்கள். (!) காவிரிமேலாண்மை வாரியம்- மின்சார உரிமை- மருத்துவ கல்விக்கு நீட் என தமிழர் அடிப்படை உரிமையை பாஜக மறுக்கிறது. முஸ்லீம் வெறுப்பை கக்குபவர்கள் தமிழன் மீதான தாக்குதலை ஏன் பேசுவதில்லை? சாதிக்காக மீசை முறுக்கும் தமிழன், இனத்துக்காக எப்போது எழுவான்? (!) தமிழனுக்குள் சாதி பெருமையை கொம்பு சீவுவது, முஸ்லீமுக்கு எதிராக வன்மத்தை வளர்த்துவது என்று நம்மைப் பிரித்து நம் நகரங்களை மார்வாடிக்கு தாரை வார்த்தார்கள். கோவையில் பாஜக வளர்ந்த பின் கொங்கு மண்டலம் மார்வாடி மண்டலமானது. என்று அடுத்தடுத்து கீச்சுகளைப் பதிவிட்டுள்ளார். இதற்கு ஏராளமான பாராட்டுரைகள் கீச்சுவில் பதிவிடப்பட்டு வருகின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



