Show all

வங்கியில் போய் கடன் வாங்கிக் கொள். அரசுக்கு வரிவட்டிகளை மூன்று மாதம் கழித்து கட்டு! மோடி பீடிகை போட்ட- நிர்மலா சீதாராமன் அறிவித்த- 20இலட்சம்கோடி பொதியை

கடன் தருவதாக வெறுமனே அறிவிப்பு மற்றும் மக்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி வட்டிகளை கொஞ்ச நாள் தள்ளிப்போடும் நடவடிக்கையாக இருப்பதாகவும் உருப்படியான நடவடிக்கைகள் எவையும் இல்லை என்றும் பொருளாதார வல்லுனர்கள் தொழிற்சங்கத் தலைவர்கள்- நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கிறார்கள்.

01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:; நடுவண் பாஜக அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று அறிவித்த வேளாண் பெருமக்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர் நலன் சார்ந்த அறிவிப்புகளில் ஏமாற்றம் மிஞ்சியதாக பொருளாதார வல்லுனர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கிறார்கள். இந்த ஆறு ஆண்டுகளாக நடுவண் பாஜக அரசு மக்களை அலைகழிப்பதைத் தவிர, யாருக்கு என்ன உதவிகளைச் செய்தது? தற்போது மட்டும் ஏமாறுவதற்கு? ஏமாற்றம் எதுவும் இல்லை எதிர்பார்த்ததுதான் என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை மீட்டெடுப்பதற்காக 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதிப்பொதியை அறிவிக்கப் போவதாக தலைமைஅமைச்சா நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை 4 மணி மற்றும் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார், அமைச்சர் நிர்மலா சீதாராமன். 

தொழில் நிறுவனங்கள் செயல்படுவதற்கான கடன் தருவதாக அறிவித்து, அதுவாங்கி, அதிகாரிகள் வங்கிகள் கொடுத்து… பலனில்லை என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள். 

வருமான வரி தள்ளுபடி இல்லை. ஆனால் அதுதாம் வேண்டும். நாட்டில் புதிதாக வீட்டு உபயோகப் பொருள் உள்ளிட்ட பொருட்களை வாங்க கூடியவர்கள் நடுத்தர வர்க்கத்தினர்தான். அவர்களில் பெரும்பாலானோர் மாத சம்பளக்காரர்கள். எனவே 15 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு இந்த ஆண்டு வருமான வரி பிடித்தம் கிடையாது என்பன போன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தால் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த உதவி இருக்கும். ஆனால் வருமான வரி செலுத்தும் காலக்கெடு மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதே தவிர, தள்ளுபடி செய்யப்படவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 

கடன் தள்ளுபடிதாம் உடனடித் தேவை. வேளாண் பெருமக்களுக்கான கடனுக்கான வட்டி செலுத்த காலஅவகாசம் அறிவித்தாரே தவிர, கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. 

50,000 வரை சாலையோர வணிகர்கள் கடன் பெற வசதி செய்யப்பட்டுள்ளதாம். ஆனால் வேலைவாய்ப்பு இல்லாத இந்த காலகட்டத்தில், இந்தக் கடன் உதவியை வங்கிகள் வழங்குமா என்று தொழிற்சங்கத்தினர் கேள்வி எழுப்புகிறார்கள். தொழிலாளர்கள் கடன் கேட்டு வங்கிக்குச் சென்றால், தர முடியாது என்று கூறும் சூழ்நிலை உள்ள நிலையில், இந்தப் பணத்தை இலவசமாக கொடுக்க வேண்டுமே தவிர, கடனாக கொடுப்பது நடைமுறை சாத்தியமற்றது என்கிறார்கள் அவர்கள். 

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடு கட்டி கொடுக்கப்படும் என்பதெல்லாம் இனி வரும் காலத்திற்கான தேர்தல் வாக்குறுதி மாதிரி இருக்கிறது. இப்போது அவர்கள் வீடின்றி நடந்தே ஊர்களுக்கு போவதற்கு மாற்று என்ன என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கேட்கிறார்கள். ஆக மொத்தம், எல்லாமே கடன் தருவதாக வெறுமனே அறிவிப்பு மற்றும் மக்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி வட்டிகளை கொஞ்ச நாள் தள்ளிப்போடும் நடவடிக்கையாக இருப்பதாகவும் உருப்படியான நடவடிக்கைகள் எவையும் இல்லை என்றும் தெரிவிக்கிறார்கள் அவர்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.