முன்னாள் நடுவண் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அறுபத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானாவில் பிறந்தார் சுஷ்மா ஸ்வராஜ். அவரது தந்தை ஹர்தேவ் சர்மா ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் முதன்மை நிர்வாகியாக இருந்தவர். சுஷ்மா ஹரியானாவில் உள்ள சனாதன் தர்மா கல்லூரியில் சமஸ்கிருத்தை முதல் பாடமாகக்கொண்டு சமூகவியல் பட்டப் படிப்பை முடித்துள்ளார். மேலும் பஞ்சாப் பல்கலைகழகத்தில் சட்டப்படிப்பையும் நிறைவுசெய்துள்ளார். 46 ஆண்டுகளுக்கு முன்பு உச்சஅறங்கூற்று மன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியைத்தொடங்கினார். இதையடுத்து அவர் ஹரியானா மாநில அமைச்சராக இருந்தார். இளம் அகவையிலேயே அமைச்சரான பெருமை அவருக்கு உண்டு. பாஜகவின் ஹரியானா மாநிலத்தலைவராக இருந்தார். டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக 52 நாள்கள் பணியாற்றினார். 7 முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். நடுவண் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர், இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான பாஜக பதவி ஏற்றபோது, உடல்நிலை பாதிப்பு காரணமாக அமைச்சர் பதவியை மறுத்தார். அண்மையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டது. இந்நிலையில், மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு தலைமஅமைச்சர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது கீச்சுவில் வருத்தம் தெரிவித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,237.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.