ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள உழவர்விரோத வேளாண் சட்டங்களைக் கண்டித்து பஞ்சாப், அரியானா மாநில வேளாண் பெருமக்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். 13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள உழவர்விரோத வேளாண் சட்டங்களைக் கண்டித்து பஞ்சாப், அரியானா மாநில வேளாண் பெருமக்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஒன்றிய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப், அரியானா வேளாண் பெருமக்கள், முந்தாநாள் டெல்லி நோக்கி பேரணியாக சென்றனர். டிராக்டர்களிலும், நடந்தும் டெல்லியை நோக்கி சென்ற அவர்களை அரியானா எல்லையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். காவல்துறையினரின் தடுப்புகளை உழவர்கள் தூக்கி எரிந்ததால், கடும் மோதல் ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் உழவர்களை விரட்டியடிக்க காவல்துறையினர் முயன்றனர். ஆனாலும் உழவர்கள் தொடர்ந்து டெல்லி நோக்கி சென்றனர். நேற்று 2-வது நாளாக அவர்கள் தலைநகர் நோக்கி சென்றனர். ஆனால் செல்லும் வழியெங்கும் காவல்துறையினர் அவர்களுக்குத் தடையை ஏற்படுத்தினார். சாலைகளில் குழிகளை வெட்டினர், மணல் நிரம்பிய லாரிகளை நிறுத்தினர். தடையை எதிர்த்து உழவர்கள் முன்னேறி சென்றனர். டெல்லி சிங்கு எல்லையில் உழவர்கள் குவிந்தபோது, அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் காவல்துறையினர் விரட்டியடித்தனர். இதனால் எல்லையில் போர்க்களம்போல் பதட்டம் உருவானது. எனினும், உழவர்கள் பின்வாங்காமல் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டனர். நிலைமை தீவிரமானதால் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் உழவர்களை டெல்லிக்குள் நேற்று மாலை காவல்துறையினர் அனுமதி அளித்தனர். புராரி திடலில் போராட்டம் நடத்த அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. உழவர்கள் செல்லும் வழிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் எல்லையில் இருந்து டெல்லி நோக்கி உழவர்கள் புறப்பட்டனர். டிராக்டர்களுடன் புராரி திடலுக்கு வந்து சேர்ந்த உழவர்கள்;, இன்று காலை 3-வது நாளாக போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான உழவர்கள் அந்தத் திடலை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றனர். வேளாண் பெருமக்கள் குடும்பத்தோடும் சில மாதங்களுக்கு சமைத்து உண்பதற்குத் தேவையான உணவுப் பொருட்களோடும், தட்டுமுட்டுப் பொருட்களோடுமே போராட்டத்தை முன்னெடுத்து இருக்கின்றனர். அங்காங்கே சமைத்து சாப்பிடுவதற்காக பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை வைத்துள்ளனர். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படாத வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக்களத்தில் உள்ள வேளாண் பெருமக்கள் தெரிவித்தனர். இதனால் தலைநகரில் பதட்டம் நிலவுவதால் நகர் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். வேளாண் பெருமக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், அரசு அவர்களுடன் எதிர்வரும் வியாழக்கிழமையன்று கலந்துரையாடல் நடத்த தயாராக உள்ளதாகவும் ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய பாஜக அரசு பஞ்சாப், அரியானா மாநில வேளாண் பெருமக்களிடம் தோல்வியைத் தழுவும்வரை- பஞ்சாப், அரியானா மாநில வேளாண் பெருமக்களின் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது என்று உறுதியாக நம்பப்படுகிறது. இவர்களிடம் பாஜக தோல்வியைத் தழுவுமேயானால் இதுவரை ஒன்றிய பாஜக அரசு, எதிர்ப்பு இல்லாமல் கொண்டுவந்த மக்கள் விரோத அனைத்து சட்டவரைவுகளும் சட்ட அடிப்படையிலேயே கேள்விக்கு உள்ளாக்கப்படும் என்று தெரியவருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



