Show all

அடித்துப் பேசும் சுப்பிரமணியன் சுவாமி! வாஜ்பாய் போன்று நரேந்திர மோடியும் ஆட்சி இழப்பார்

25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்றத் தேர்தல் இன்னும் ஒரு ஓராண்டுக்குள் வர உள்ள நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான அரசால் பொருளாதாரத்தில் மாற்றத்தினைக் கொண்டு வந்து வாக்குகள் பெறுவது என்பது எல்லாம் முடியவே முடியாத காரியம் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

பொருளாதார வல்லுநர் மற்றும் புள்ளியியலாளரான சுப்பிரமணியன் சுவாமி இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை என்றும், பாஜகவிற்குப் பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் ஓட்டு கிடைக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். வாஜ்பாய் இந்தியா ஒளிர்கிறது என்று தோல்வி தான் அடைந்தார் என்று கூறியுள்ளார். 

கடந்த பொதுத் தேர்தலின் போது பாஜக வெற்றிபெற, தேர்தல் கருத்துப் பரப்புதல்களில், பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு உருவாக்குதல், ஊழல் இல்லா இந்தியா போன்றவற்றை முன்னிறுத்தி தாம் பேசியுள்ளார். 

நரேந்திர மோடி தலைமையிலான அரசு இது வரை சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் ஐபிசி எனப்படும் திவால் சட்டம் என இரண்டு முதன்மைச் சீர்திருத்தங்களைச் செய்துள்ளது. அதில் சரக்கு-சேவை வரி அமலுக்கு வந்து இருந்தாலும் எளிமையானதாக இல்லை, இன்னும் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. 

ஐபிசி திவால் சட்டம் இப்போது தான் தொடங்கியுள்ளது. இவை இரண்டும் இந்திய பொருளாதாரத்திற்கான முதுகெலும்புகள் ஆகும்.   

சுப்பிரமணியன் சுவாமி ஏற்கனவே தனது சொந்த கட்சியான பாஜக தலைமையிலான அரசின் பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து முன்பு கருத்து தெரிவித்து இருந்த சுப்பிரமணியன் சுவாமி இது நல்ல திட்டம். ஆனால் அதற்கு முறையாகத் தயாராகாததால் தோல்வி அடைந்தது. சரக்கு-சேவை வரி முட்டாள்தனமானது என்றும், இந்தியா அதற்கான தொழில்நுட்ப வளர்ச்சியினைப் பெறவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,843.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.