Show all

படித்துக் கொண்டே பகுதி நேரமாக மீன்வணிகத்தில் கல்லூரி மாணவி! பினராயி விஜயன் பாராட்டு

11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எர்ணாகுளம் அருகே தொடுபுழாவைச் சேர்ந்த இளம் பெண் ஹனன் அகவை 19. இவர் தொடுபுழாவில் உள்ள தனியார் கல்லூரியில் இயல்அறிவு இளவல் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

கல்லூரிக்குச் சென்ற நேரம் போக மாலை நேரங்களில் தம்மணம் பகுதியில் மீன் விற்பனை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் ஹனன், 60 கி.மீ. தொலைவில் இருக்கும் தனது கல்லூரிக்குச் சென்று படித்துவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்து, மீன் விற்பனையைக் கவனித்து வருகிறார்.

இந்த மீன் விற்பனையின் மூலம்தான் ஹனன் தனது படிப்பையும், தனது குடும்பத்தையும் கவனித்து வருகிறார். அவரின் தந்தை மதுபோதைக்கு அடிமையாகி உள்ளார், தாய் உடல்நலம் இல்லாமல் வீட்டில் இருப்பதால், ஹனன் கடுமையாக உழைத்தும், படித்தும் வருகிறார்.

ஹனன் குறித்து கடந்த 2 நாட்களுக்கு முன், மாத்ருபூமி நாளேட்டில் சிறப்புக் கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் மலையாள திரை நட்சத்திரங்களும் ஹனனின் நடவடிக்கையைப் புகழ்ந்து உதவி செய்ய முன்வருவதாகத் தெரிவித்தனர்.

ஆனால், சமூக ஊடகங்களில் ஒரு சிலர் கல்லூரி மாணவி ஹனன் நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்தனர். ஹனனின் செயல்பாடுகள் மீது ஐயம் எழுப்பிய இணையப் பயனாளர்கள் ஹனனின் நடவடிக்கை போலியானது, செய்தியும் போலியானது என்று கூறி அவரைக் கடுமையாக விமர்சித்தனர். இது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பாக உருவெடுத்தது.

ஆனால், ஹனனின் கல்லூரி முதல்வர், தோழிகள், உறவினர்கள் அனைவரும் மாத்ரூபூமி நாளேட்டில் வந்த செய்தி உண்மையானதுதான். ஹனன் உண்மையில் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர், அவரின் பொருளாதார நிலையால் மாலை நேரத்தில் மீன் விற்கிறார். அந்தச் செய்தி போலியானது அல்ல என்று ஆதரவு தெரிவித்தனர். இருந்தாலும், இணையப் பயனாளர்கள் தொடர்ந்து ஹனனைப் புண்படுத்தும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.

இது குறித்து அறிந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடுவண் அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் முகநூலில் ஹனனுக்கு ஆதரவு அளித்து கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனும், ஹனனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஹனன் குறித்து அறிந்தேன். ஒரு பெண் இளம் அகவையில் உழைத்து, சொந்தக்காலில் நிற்பது என்பது பெருமைக்குரியது. தனது உழைப்பினால் கிடைக்கும் பணத்தின் மூலம் குடும்பத்தையும், படிப்பையும் ஹனன் கவனித்துக் கொள்கிறார் என்பது மகிழ்ச்சி.

இதேபோன்ற சூழலில் இருக்கும் மக்கள் நிச்சயம் ஹனனின் நிலைமையைப் புரிந்து கொள்வார்கள். ஆனால், ஹனனின் சூழல் அனைத்தில் இருந்தும் மேலானது. ஹனன் தனது கல்விக்காக மட்டும் உழைக்கவில்லை, தனது குடும்பத்துக்காகவும் சேர்த்து உழைக்கிறார்.

நான் ஹனனின் சூழலைப் புரிந்துகொண்டதால் அவரை நினைத்து பெருமைப்படுகிறேன். ஹனன்! கண்டிப்பாக துணிச்சலுடன் நீங்கள் எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். எந்தவிதமான கடினமான சூழலிலும் தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். நான் உங்களுடன் இருக்கிறேன். கேரளாவே உங்களுக்கு ஆதரவு அளிக்கும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

உண்மையைப் புரிந்துகொள்ளாமல், சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை மட்டும் நம்புவது ஒரு பழக்கமாக இருக்கிறது. இந்தப் பழக்கம் எதிர்காலத்தில் சமூகத்தின் சீரழிவுக்குக் காரணமாக இருக்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,861.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.