Show all

படேல் சிலை சுற்றி வேலி அமைக்கும் பணி நிறுத்தம்! கிராம மக்கள் எதிர்ப்பு

குஜராத்தில் படேல் சிலையை சுற்றி வேலி அமைக்கும் பணி மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: குஜராத்தின் நர்மதா மாவட்டம், நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில், சர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி உயரத்தில், சர்தார் வல்லபாய் படேல் மாபெரும் சிலையை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தலைமைஅமைச்சர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த சிலை அமைத்துள்ள நர்மதா மாவட்டம் கேவாடியா கிராமம் அதை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றி வேலி அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் நேற்று தொடங்கியது, இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கேவாடியா கிராமம் அதன் அருகே உள்ள மேலும் 5 கிராம மக்களிடம் அனுமதி கேட்காமல் திடீரென வேலி அமைப்பது தங்களது வேளாண் நிலங்களை களவாடும் முயற்சி சார்ந்ததாகத் தெரிவித்து வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் வேலி அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில், சர்தார் வல்லபாய் படேல்சிலை திறக்கப்படுவதற்கு, 72 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடியது குறிப்பிடத்தக்கது.

சிலை அமைப்புப் பணிக்காக, தங்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு அரசு கையகப்படுத்தும். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பறிபோகும் என்று அச்சம் தெரிவித்தனர்.

ஆயினும், உரிய விலை வழங்கப்படும். நிலம் அளித்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். அடிப்படை வசதிகள் செய்துதரப்படும் என்று கூறி, நரேந்திர மோடி அரசு நிலத்தைப் பெற்றது.

சிலை அமையவிருக்கும் நர்மதா மாவட்டத்திலுள்ள 72 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை சிலையை திறக்கவிட மாட்டோம் என்று அறிவித்திருந்தனர். ஒரு வழியாக அதிகாரிகள் முயற்சிகளால் அவர்கள் சமாதானப்படுத்தப்பட்டே சிலை திறக்கப்பட்டது. அவர்களுக்கு அதிகாரிகள் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், ஒன்றும் நடவாததுபோல் அதிகாரிகள் வேலிஅமைக்கும் பணியில் ஈடுபடுவதாக கிராம மக்கள் வேலிஅமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.