புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்கள் தொடர்வண்டியில் ஏறும் முன்பு அம்மாநில முதல்வர் நாராயணசாமியுடன் தம்படம் (செல்பி) எடுத்துக் கொண்டனர். 23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்கள் ஊரடங்கால் தொழில் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் புதுச்சேரியில் முடங்கிவிட்டனர். இவர்கள் சொந்த ஊர் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்தது. அந்த வகையில் ஜம்மூ காஷ்மீர், பீகார், உபி மாநிலங்களுக்கு ஏற்கனவே சிறப்பு தொடர்வண்டிகள் மூலம் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்தகட்டமாக அசாம், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 1020 பேர் நேற்று இரவு புதுச்சேரியில் இருந்து சிறப்பு தொடர்வண்டி மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். காரைக்காலில் இருந்து நேற்று புறப்பட்டு இந்த சிறப்பு தொடர்வண்டி அங்கிருந்த 300 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி தொடர்வண்டி நிலையத்தில் நேற்று மாலை அடைந்தது. இங்கு காத்திருந்த 900 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு இரவு 9 மணிக்கு ஜார்கண்ட், அசாம் மாநிலங்கள் வழியாக மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பான் குரி தொடர்வண்டி நிலையத்தை சென்றடைகிறது. தொடர்வண்டியில் புறப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்து பிரியாவிடை கொண்டனர். அப்போது ஒருவர் தொழிலாளர் பெயர் என்ன என ஹிந்தியில் கேட்க அவர் ‘பர்ரானா கார்ட்டூன்’ எனக் கூற முதல்வர் ‘கொரோனா கார்ட்டூன் இல்லையே’ என கூறிச் சிரித்தார். அப்போது பல தொழிலாளர்கள் ஆர்வத்துடன் முதல் அமைச்சர் நாராயணசாமியுடன் தம்படம் எடுத்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீரை வழங்கி கொடியசைத்து சிறப்பு தொடர்வண்டியில் முதல்வர் அனுப்பி வைத்தார். சிறப்பு தொடர்வண்டி அனுப்பும் நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் ஜெயமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அருண் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



