மும்மொழிக் கொள்கையை நிருவாகப்படுத்தியது காங்கிரஸ் தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களில். அது தற்போது அறுவடையாகிக் கொண்டிருக்கிறது நேற்று, நடுவண் தொழிலக பாதுகாப்புப்படை பெண் காவலர் மூலமாகவும் இன்று நடுவண் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் மூலமாகவும். இந்த அழகில்தான் தமிழகத்தில் மூன்றாவது மொழியாக ஹிந்தியைத் திணித்து விட புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்திருக்கிறது நடுவண் பாஜக அரசு. 06,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் டெல்லியில் நடந்த கூட்டத்தில் ஹிந்தி தெரியாதவர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று அந்த அமைச்சகத்தின் செயலாளர் கூறியதாக வெளியாகி இருக்கும் தகவல்களால் ஒட்டு மொத்த இந்தியாவும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. டெல்லியில் கடந்த 3 நாட்களாக ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் பயிற்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து ஆயுர்வேத மற்றும் யோகா மருத்துவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு நடுவண் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் பயிற்சி எடுத்துள்ளார். தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட மருத்துவர் ஒருவர் ஹிந்தியில் பேசினால் எங்களுக்கு புரியாது, ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு அந்த செயலாளர் எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது. உங்களுக்கு ஹிந்தி தெரியாவிட்டால், கூட்டத்தில் இருந்து விலகிக் கொள்ளவும் என்று தெரிவித்ததாக தகவல்களும், காணெளியும் வெளியாகி ஒட்டு மொத்த இந்தியாவையே ஆட வைத்துள்ளது. இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி படிக்கிற மாநிலங்களில் இருந்து கலந்து கொண்ட பல மருத்துவர்களும் ஹிந்தி தெரியாது, ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அப்போதும் கேட்காத செயலாளர் விடாப்பிடியாக அவர்களை வெளியேறுமாறு கூறியுள்ளார். அண்மையில் சென்னை விமான நிலையத்தில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் நடுவண் தொழிலக பாதுகாப்புப்படை பெண் காவலர் ஹிந்தியில் பேசினார். அதற்கு தனக்கு ஹிந்தி தெரியாது என்றும் ஆங்கிலத்தில் பேசுமாறும் கனிமொழி வலியுறுத்தினார். அதற்கு அந்த பெண் காவலர், ‘தும் பாரதியாங் ஹைங்’ என்று கேள்வி எழுப்பி இருந்ததாக கனிமொழி தனது கீச்சுவில் பதிவிட்டு இருந்தார். இதற்கு இந்திய அளவில் பெரிய எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதற்குள் ஹிந்தியின் அடுத்த ஆட்டம் தொடங்கி விட்டது ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் மூலமாக. தமிழகத்தில் கல்வியில்- தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகள் மட்டும் கற்பிப்பது நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் இரண்டு மொழிகளிலும் மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி கிடைக்கும். பள்ளி இறுதி வகுப்பில் ஆங்கிலத்தில் தேர்ச்சி இழந்தவர்கள், மேற்கொண்டு கல்லூரிக் கல்வியை தெடராமலே இடைநின்று விடுவோர்கள் பல்லாயிரம் பேர்களாவார்கள். ஆனாலும் அந்த முறை தமிழகத்தில் தொடர்ந்து கொண்டே இருப்பதால் படித்தவர்கள் அனைவரும் தமிழுக்கு இணையாக ஆங்கிலத்தைப் புரிந்து கொள்கிறவர்களாகவே இருப்பார்கள். மற்றும் படிக்கும் துறை சார்ந்தும் நல்ல புலமை பெற்றவர்களாக இருப்பார்கள். ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் ஹிந்தியில் மட்டும் பேசியுள்ளார். அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை. காரணம்: ஹிந்தி மொழிக்காரர்கள் எவ்வளவு அதிகம் படித்தாலும் கருத்துப் பரிமாற்றத்திற்காகக் கூட ஆங்கிலத்தில் புலமை பெறாமலே வடஇந்தியாவில் கல்வியை முடிக்க முடிகிறது. தமிழகம் தவிர்த்து இந்தியா முழுவதும் கல்வியில்- தாய்மொழி, ஹிந்தி, ஆங்கிலம் என்று மூன்று மொழிகள் கற்பிப்பது நடைமுறையில் உள்ளன. ஆனால் அவர்கள் துறை சார்ந்த புலமையில் மட்டுமே தேறினால் போதும். இரண்டாவதாக, மூன்றாவதாகப் படிக்கிற ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் உயர் கல்வி கற்றவர்களுக்குக்கூட ஆங்கிலத்திலோ ஹிந்தியிலோ கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கு போதிய புலமை இருப்பதில்லை. இந்த அழகில்தான் தமிழகத்தில் மூன்றாவது மொழியாக ஹிந்தியைத் திணித்து விட வேண்டும் என்று வெறித்தானமாக அந்த ஒற்றை நோக்கம் கருதியே, புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்திருக்கிறது நடுவண் பாஜக அரசு. மூன்றாவது மொழிக்கு- மூன்றாவது மொழியாக ஹிந்திக்கு- தமிழர்கள் அஞ்சுவதற்குக் காரணம்: இந்தியாவின் மற்ற மாநிலங்களின் கல்வித்துறை, இரண்டாவது மூன்றாவது மொழிகளில் தேர்ச்சியை அவ்வளவாக கண்டு கொள்ளாமல் துறைக் கல்விக்கே முதன்மை அளித்து தேர்ச்சி அளித்து விடுவதுபோல, தமிழக கல்வித்துறை இருந்து விடாது. மாற்றாக தமிழக கல்வித்துறை ஆங்கிலத்துக்கு இணையாக ஹிந்தியையும் முன்னெடுத்து தமிழர்களின் கல்வியில் இடைநிற்றலை இன்னும் அதிகப்படுத்திவிடும் என்பதே ஆகும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



