Show all

பாஜக ஆட்சியில் இந்தியா முழுவதும் தலைதூக்கும் மாநில உணர்வுகள்! இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி மராட்டியர்கள்; போராட்டம்

17,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த நான்காண்டு பாஜக ஆட்சியில், தேசியம் பேசிக் கொண்டு கார்ப்பரேட்டுகள் மட்டுமே ஆதாயம் பெற்று வளர்ச்சி அடைவாதால் இந்திய முழுவதும் சிறு சிறு மாநில அமைப்புகள் மக்கள் மத்தியில் எழுச்சி பெற்று வருகின்றன. அந்த வகையாக மராட்டி மாநிலத்தில், வேலை, கல்வியில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி சிறை நிரப்பும் போராட்டத்தை மராட்டியர்கள் நேற்று நடத்தினர்.

தெற்கு மும்பையிலுள்ள ஆஸாத் மைதானத்தில் இந்த சிறை நிரப்பும் போராட்டத்தை மராத்தா கிராந்தி மோர்ச்சா தலைமையிலான அமைப்புகள் நடத்தின. இதே போன்ற போராட்டம் மாநிலத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்றது.

ஆனால் இந்தப் போராட்டத்தால் சாலை, தொடர் வண்டிபோக்குவரத்து எதுவும் பாதிக்கப்படவில்லை என மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போராட்டத்தையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

போராட்டம் தொடர்பாக ஆஸாத் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கேதார் ஷிண்டே என்பவர் கூறியதாவது: மராட்டியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி நீண்ட ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் எந்த அரசும் இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த முன்வரவில்லை. இடஒதுக்கீட்டை அமல்படுத்துவேன் என்று கூறிய முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் மீது நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம். அவரது வெற்று உறுதிமொழிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

லத்தூர் மாவட்டத்திலுள்ள மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சம்பாஜி பாட்டீல்-நிலான்கேக்கர் வீட்டின் முன்பு மராட்டியர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வடக்கு சோலாப்பூரில் புனே  சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் சிலர் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.

இதேபோல புனேவின் ஜுன்னார், ஷிருர், கேத் டெஹ்சில் பகுதியிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஹிங்கோலி மாவட்டம் மராத்வாடா பகுதியில் இடஒதுக்கீடு கோரி மாட்டு வண்டி ஊர்வலத்தை நடத்தினர்.

இடஒதுக்கீடு கோரி கடந்த 10 நாட்களாக மாநிலம் முழுவதும் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரும் போராட்டத்தின்போது இதுவரை 6 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் மராட்டிய இளைஞர்களுக்கு கடன் உதவியை உடனடியாக வழங்குமாறு வங்கிகளுக்கு மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மராட்டிய இளைஞர்கள் கடன் கோரி வங்கிகளில் விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கு உத்தரவாதத்தை வங்கிகள் கோரின. இதனால் அவர்களால் கடன் பெற முடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில் மாநில வருவாய்த் துறை அமைச்சர் சந்திராகாந்த் பாட்டீல் தலைமையில் மராட்டிய இனத்தவர் நலனுக்காக அமைக்கப்பட்ட அமைச்சரவை துணைக் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மராட்டிய இளைஞர்களுக்கு கடன் உதவியை வங்கிகள் உடனே வழங்கவேண்டும் என்றும் அவர்களுக்கு அரசே உத்தரவாதம் வழங்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,867.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.