ஒரு மாநிலத்தின் முதன்மையான இரண்டு கட்சிகள் வன்மம் பாராட்டிக் கொள்வதில், தமிழகத்தின் அதிமுக- திமுகவிற்கு இணையாக, இந்தியாவில் நடுவண் அரசிலோ, மற்ற எந்த மாநிலத்திலோ இதுவரை யாரும் இருந்ததில்லை. அந்த சாதனையை முறியடித்திருக்கிறது தற்போது ஆந்திரத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி. 10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த முறை தெலுங்கு தேசம் கட்சி பெரும் வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் ஆட்சிகாலத்தில் கிருஷ்ண ஆற்றங்கரையில், சுமார் 8 கோடி செலவில் பிரஜா வேதிகா என்ற கட்டடத்தைக் கட்டினார். பிரஜா வேதிகா கட்டடத்தை கட்சியினரைச் சந்திக்கவும், முதன்மைக் கூட்டங்கள் நடத்தவும் கிழமை இறுதி நாட்களில் குடும்பத்துடன் கழிக்கவும் பயன்படுத்திவந்தார் சந்திரபாபு நாயுடு. அண்மையில் நடந்து முடிந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகப் பதவியேற்றுள்ளார். அதைத் தொடர்ந்து முன்னால் ஆளுங்கட்சி முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது ஊழல், குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். அமராவதி திட்டத்தில் சந்திரபாபு நாயுடு பலகோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாகவும் அதற்காக முறையான விசாரணை நடத்தப்படும் எனக் கூறியிருக்கிறார் ஜெகன். ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நேற்று முதன்முதலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அதில், பிரஜா வேதிகா என்ற கட்டிடம், சட்ட விதிகளை மீறி முறையில்லாமல் ஆற்றங்கரையில் கட்டுப்பட்டுள்ளது. அதனால் அதை இடிக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த பிரஜா வேதிகா கட்டடத்தில்தான் நேற்று ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் நடைபெற்றது. அங்கு இருந்துகொண்டே அதே கட்டடத்தை இடிக்கக் கூறியுள்ளார் ஜெகன். நடுவண் அரசில் ஆளும் வாய்ப்பு பெற்றிருக்கிற பாஜக மற்றும் காங்கிரஸ் இதுபோன்ற வன்மைத்தைப் பின்பற்றுமேயானால், போட்டியின் காரணமாக இந்தியாவிற்கு நன்மையும் சிறந்த ஆட்சியும் கிடைக்கும். ஆனால் மாநில முதன்மைக் கட்சிகள் இவ்வளவு பகைமை பாராட்டுவது ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல, தமிழகத்தில் திமுகவும்- அதிமுகவும் பகைமை பாராட்டி ஏராளமான தமிழக நலன்களை, உரிமைகளை நடுவண் அரசிடம் இழந்திருக்கிறது. அதே வழியில் ஆந்திரமும் பயணிக்க அடிக்கல் நாட்டியிருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,194.
பிரஜா வேதிகா கட்டடத்தை தானே தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள அனுமதி வேண்டும் எனக் கடந்த மாதம் சந்திரபாபு நாயுடு ஆந்திர அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அரசு அவரின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. கட்டடத்தை இடிக்கும் பணிகள் நாளை முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பற்றி பேசியுள்ள தெலுங்கு தேசம் சட்டமன்ற உறுப்பினர் கோரண்ட்லா புச்சையா சவுத்ரி, பிரஜா வேதிகா தனி மனித செயல்பாட்டுக்காக கட்டப்பட்டது இல்லை. அதைப் பலர் பயன்படுத்தி வருகின்றனர். முறை தவறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பிரஜா வேதிகா கட்டடத்துக்கு அருகில் நிறைய கட்டடங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் ஜெகன் இடித்துவிடுவாரா. ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் அங்கு இருக்கிறோம். கிருஷ்ணா ஆற்றில் இவர்கள் கூறுவது போல் வெள்ளம் வந்ததே இல்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



