Show all

மனைவியின் சடலத்தோடு மருத்துவர் போராட்டம்! குடிகாரநபர் ஏற்படுத்திய கொடூர விபத்திற்கு காரணமான டாஸ்மாக்கை மூடக் கோரி.

குடிபோதையில் திக்கு தெரியாமல் அசுர வேகத்தில் பைக்கில் வந்த குடிகார நபர் ஏற்படுத்திய விபத்தால், சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார் சோபனா, சோபனாவின் கணவர் மருத்துவர் இரமேஷ் தன் மனைவியின் சடலத்தோடு 4 மணி நேரம் போராடினார் விபத்திற்கு காரணமான டாஸ்மாக்கை மூடக் கோரி.

10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கோவையை அடுத்த கணுவாய்ப் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் இரமேஷ். இவருடைய மகள் ஆனைகட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளியிலிருந்து மகளை அழைத்து வருவதற்காக இரமேஷின் மனைவி சோபனா ஸ்கூட்டரில் சென்றுள்ளார். 

மகளை அழைத்துக்கொண்டு ஜம்புகண்டிக்கு அருகில் சோபனா வந்துகொண்டிருந்தபோது, எதிர்த் திசையில் குடிபோதையில் திக்கு தெரியாமல் அசுர வேகத்தில் பைக்கில் வந்த குடிகார நபர் சோபனாவின் ஸ்கூட்டர் மீது நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தினார். இந்த கோர விபத்தில், சோபனா  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்தப் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது என்றும், எதிர்பாரத இந்த விபத்திற்கு காரணம் அந்த டாஸ்மாக் கடை இயங்க அனுமதிக்கப் பட்டிருப்பதே என்று பொதுமக்கள் குமுறுகிறார்கள்.

அந்த விபத்தில் பலத்த அடியோடு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தனது மகளை, தகவலறிந்து சம்பவ இடத்திற்குப் பதறிக்கொண்டு வந்த மருத்துவர் இரமேஷ், மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டார். 

பின் மனைவியின் உடலைப் பார்த்து கண்ணீர் மல்கக் கதறி அழுத இரமேஷ், மனைவியின் சடலத்தோடு அந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராட்டத்தில் குதித்தார். 

டாஸ்மாக்கை மூடச்சொல்லி, தன் மனைவியின் சடலத்தோடு 4 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடியுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்புகண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மது குடித்துவிட்டு வருபவர்களால் அந்தப் பகுதியில் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடக்கிறது என்பது அந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் குற்றச்சாட்டு. சோபனாவின் ஸ்கூட்டரில் மோதிய ஆனைகட்டியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் குடிபோதையில் இருந்ததாகவும், போதைதான் இந்த விபத்துக்குக் காரணம் என்றும் அந்த டாஸ்மாக் மதுக்கடையை மூடும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனக்கூறி மருத்துவருக்கு ஆதரவாக அப்பகுதி மக்களும் போரட்டத்தில் கலந்து கொண்டனர். 

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோவை வடக்கு பகுதி வட்டாட்சியர், துடியலூர் காவல்ஆய்வாளர் பாலமுரளி ஆகியோர் போராட்டம் நடத்திய இரமேசிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது கடும் சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்த பிறகே, தனது போராட்டத்தைக் கைவிட்டார் மருத்துவர் இரமேஷ். அவருடைய மகள் கோவை கங்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். சோபனா மரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மதுபானக்கடையை மூடக்கோரி போராடிய மருத்துவர் இரமேசுக்கு, நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும். அவரது குடும்பம் போல இனியொரு குடும்பம் பாதிக்கப்படாதிருக்க, உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மதுபானக்கடையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்த நபரால், சமூகப் போராளியும் மருத்துவருமான கோவை இரமேஷ் அவர்களின் மனைவி சோபனா விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே மரணமுற்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன். பதைபதைக்கவைக்கின்ற இக்கொடுமையான சம்பவத்தில் மருத்துவர் இரமேஷின் மகள் பலத்த காயம் அடைந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. 

மக்களின் நலன் காக்கவேண்டிய மாநில அரசே மதுபானக் கடைகளைத் திறந்து, மக்களைக் குடிகாரர்களாக்கிவருகிற பேரவலம் தொடர்ச்சியாக இந்த மண்ணில் நடந்துவருகிறது. மதுவிலக்கு கேட்டு மக்கள் நலன் சார்ந்த அரசியல் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாகப் போராடிவருகிறோம். ஆனால், தமிழ்நாடு அரசு இதனைக் கண்டுகொள்ளாமல், தனக்கு வருவாய் வருகிற மிகப்பெரும் வழியாக டாஸ்மாக் மதுபானக் கடைகளைக் கருதி, ஓர் அறிவான சமூகமாக தமிழ்ச் சமூகத்தை உருவாக்க, தெருவெங்கும் படிப்பகங்களைத் திறக்காமல் குடி நோயாளிகளை உருவாக்க வீதிதோறும் குடிப்பகங்களைத் திறந்துவைத்து, இந்த மண்ணையும் மக்களையும் பாழ்படுத்திவருகிறது. நாடெங்கும் பரவலாக மதுபானக்கடைகளைத் திறந்துவருகிற தமிழ்நாடு அரசின் சீர்கெட்ட செயல்பாடுகளால் இன்று  ஓர் உயிர் பறிபோவிட்டது. 

மதுவைக் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவன், மனித வெடிக்குண்டுக்குச் சமம் என்கிறது உயர் அறங்கூற்றுமன்றம். அத்தகைய ஒரு குடிநோயாளியாலும், அக்குடிநோயாளியை உருவாக்கிவிட்ட அரசாலும்தான் இன்றைக்கு மருத்துவர் இரமேஷின் குடும்பமே நிலைகுலைந்து நிற்கிறது. தெருவெங்கும் மதுபானக்கடைகளைத் திறந்துவைத்து, குடிகாரர்களால் மக்கள் உயிருக்கு உலை வைத்திருப்பது என்பது தமிழ்நாடு அரசாங்கம் நேரடியாக மக்கள் நலவாழ்வின்மீது இழைத்திருக்கின்ற ஆகப்பெரும் கொடுமை. 

மதுபானக் கடையில் குடித்துவிட்டு வந்த நபரால், தன் மனைவியின் உயிரை இழந்த மருத்துவர் இரமேஷ், சடலத்தோடு வீதியில் இறங்கி மதுபானக்கடையை மூடப்போராடியது என்பது மிகுந்த வலியைத் தருகிறது. காயம்பட்ட தனது மகளைக்கூட பார்க்கச் செல்லாமல் தனியொரு ஆளாய் நின்று போராடி, அம்மதுபானக்கடையை மூடுவதாக அரசை அறிவிக்க வைத்திருக்கிறார்.

கோவை மருத்துவர் இரமேஷ் அவர்கள், எனது நீண்டகால நண்பர். பேரழிவுகளை ஏற்படுத்துகிற நாசகாரத் திட்டங்களை ஆய்வுசெய்து, அதற்கெதிராகக் குரல்கொடுத்துப் போராடிவருகிற சமூகப் பற்றாளர். அவரது உற்ற துணையாக விளங்கிய மனைவியை இழந்து வாடும் அருமை நண்பர் இரமேசுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மிகவும் சிக்கலான இத்தருணத்தில் மருத்துவர் இரமேஷ் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும் என உறுதியளிக்கிறேன்.

இதுபோன்ற உயிரிழப்புகள் இனியும் ஏற்படாமலிருக்க, இனிமேலாவது மதுவிலக்கை செயற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசு உடனடியாக விரைந்து தொடங்க வேண்டும் எனவும், மதுவிலக்கை அமல்படுத்தும் வரை உடனடி தற்காலிக நடவடிக்கையாக மதுபானக் கடைகளை மக்கள் வசிப்பிடங்களில் இருந்து மக்கள் அதிக நடமாட்டம் இல்லாத, ஆபத்தில்லாத இடங்களுக்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சரக்கு-சேவை வரி உரிமையை நடுவண் அரசுக்கு விட்டுக் கொடுத்து விட்டு, சரக்கு விற்பனையை நடத்தி மக்களுக்கு இது போன்ற அவலங்களை நிகழ்த்தி வருகிறது டாஸ்மாக் போதையில் தமிழக அரசு. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,194.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.