Show all

சோபியா,தமிழிசை இருவரும் பயணித்த விமான நிறுவனம் இதுவரை எவ்வித புகாரும் எழுப்பியிருப்பதாகத் தெரியவில்லை. 

22,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  சோபியா, கனடாவின் மாண்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் கணிதப் பிரிவில் ஆய்வு மாணவி. தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்பதால் தன் சொந்த ஊரில் ஸ்டெர்லைட்டால் நிகழும் பயங்கரங்களைப் பற்றி நன்கு அறிந்த நிலையில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவு செய்து வந்தார். 
மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கைதுக்கு எதிரான தமது கருத்துக்களைச் சமூக வலைத்தளத்தில்  பதிவு செய்திருந்தார் சோபியா. இதே போன்று சில மாதங்களுக்கு முன் குண்டர் சட்டத்தில் கைதான மற்றொரு சமூக ஆர்வலரான மாணவி வளர்மதிக்கு ஆதரவாகவும் சமூக வலைத்தளங்களில் தனது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார் சோபியா.

சோபியாவின் தந்தை அப்பாசாமி ஓய்வு பெற்ற அரசு மருத்துவர். தாய் மனோகரி தலைமை செவிலியராகப் பணியாற்றி வருகிறார். 

மாணவி சோபியா கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
பொதுமக்கள் கருத்துக் கணிப்பில் தெரிய வந்த செய்தி, மாணவி சோபியா விசயத்தில் தமிழக பாஜக தலைவரான தமிழிசை நடந்து கொண்ட விதம் தான் பக்குவமற்றதாக இருந்ததாகப் பதிவாகியிருக்கிறது. ஏனெனில், விமானத்திற்குள் கருத்து மோதல் நடைபெற்றதாக இருவரும் பயணித்த விமான நிறுவனம் இதுவரை எவ்வித புகாரும் எழுப்பியிருப்பதாகத் தெரியவில்லை. 
தமிழிசை தான் பாஜக குறித்த சோபியாவின் விமர்சனத்தைத் தாங்க இயலாது விமானத்திற்குள் அமைதியாக இருந்து விட்டு விமானத்தை விட்டு இறங்கிய பின் விமான நிலைய வளாகத்திற்குள் திரண்டிருந்த தமது ஆதரவாளர்களைக் கண்டதும் மாணவியைப் பயமுறுத்தும் நோக்கிலும், தம் மீதும் தமது கட்சியின் மீதும் வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்களுக்காக பழிவாங்கும் நோக்கிலும் மாணவி சோபியா மீது அவர் உபயோகிக்காத ஒரு வார்த்தையைப் பயன்படுத்தி பாஜக ஆட்சியை விமர்சித்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு பெண் தலைவர்,  தமது அரசியல் முதிர்ச்சியைக் காட்டும் விதமாக இந்த விவகாரத்தை அப்படியே நிராகரித்திருக்கலாம் அல்லது அன்னை மனதோடு அந்தப் பெண்ணை அழைத்து தன் தரப்பு வாதத்தைப் புரிய வைத்திருக்கலாம். இரண்டுக்குமே வாய்ப்பில்லை என்றால் பிற அரசியல் தலைவர்கள் செய்வதைப் போல இளம் மாணவியின் பக்குவமற்ற விமர்சனம் எனக்கருதி சோபியாவின் விமர்சனத்தைப் பொருட்படுத்தாமல் இந்த விவகாரத்தை சிரித்துக் கொண்டே கடந்திருக்கலாம். அதையெல்லாம் செய்யாமல் தன் மீதும், தான் சார்ந்திருக்கும் கட்சியின் மீதும் விமர்சனதிற்கு பழி வாங்கும் நோக்கில் மனமறிந்தே அந்த மாணவியின் செயலுக்கு தீவிரவாத முலாம் பூச வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள் தமிழகத்தின் அனுபவம் வாய்ந்த பிற அரசியல் கட்சித் தலைவர்கள்.
சோபியா பா.ஜ.கவுக்கு  எதிராக முழக்கமிட்டார் என்றால்  அவரை அழைத்துப் பேசி, அவர் தரப்பு பிரச்சனைகளை  கேட்டு, அவரை  சமாதானம் செய்து அவருக்கு  தேவையான உரிய  விளக்கங்களை பா.ஜ.க மாநிலத்தலைவர் தமிழிசை சொளந்தராஜன் கொடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்  மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தது என்பது அநாகீரிகமான செயல் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சோபியாவுக்கு தூத்துக்குடி அறங்கூற்று மன்றம் வழங்கிய பிணையை  ரத்து செய்ய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நடுவண்  அரசு வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தெரிவித்திருந்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,903.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.