Show all

ஒன்றிய பாஜக அரசின் வரவுசெலவுத் திட்டத்தோடு ஒப்பிடுகையில் சிறப்பு! இன்றைக்கு தமிழக வரவுசெலவுத் திட்டம் பதிகை செய்யப்பட்டுள்ளது

தமிழக அரசு வரவுசெலவுத்திட்டம் நம்முடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று தமிழக மக்கள் குறை சொல்லுவதற்கு, தமிழக மக்களுக்கு உரிமை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஒன்றிய அரசின் வரவுசெலவுத்திட்டத்தில் ஒன்றுமேயில்லாத நிலையில், தமிழக அரசு வரவுசெலவுத் திட்டத்தைக் கொண்டாடும் அளவில் நிறையவே இருக்கிறது. 

02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்றைக்கு தமிழக வரவுசெலவுத் திட்டம் பதிகை செய்யப்பட்டுள்ளது. இரண்டு கிழமைகளுக்கு முன்பு ஒன்றிய பாஜக அரசின் வரவுசெலவுத் திட்டப் பதிகையைச் சந்தித்தோம்.

தமிழக அரசின் வரவுசெலவுத் திட்டம் குறைந்த அதிகாரம் உள்ள மாநில அரசின் திட்டம். நடுவண் பாஜக அரசின் திட்டம் அதிகாரம் குவிந்து கிடக்கும் ஒன்றிய அரசின் திட்டம். அதனால் தமிழக அரசின் வரவுசெலவுத்  திட்டத்தில் பெரிதாக மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுக்க முடியாது என்றும், ஒன்றிய அரசின் திட்டத்தில் மக்கள் நலத்திட்டங்களை ஏராளமான முன்னெடுக்க முடியும் என்றும் வாதித்தால் அதில் நியாயம் இருக்கும். 

தமிழக அரசு வரவுசெலவுத்திட்டம் நம்முடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று தமிழக மக்கள் குறை சொல்லுவதற்கு, தமிழக மக்களுக்கு உரிமை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஒன்றிய அரசின் வரவுசெலவுத்திட்டத்தில் ஒன்றுமேயில்லாத நிலையில், தமிழக அரசு வரவுசெலவுத் திட்டத்தைக் கொண்டாடும் அளவில் நிறையவே இருக்கிறது. 

தமிழக அரசின் தமிழ்தொடர்ஆண்டு-5121-22 ம் ஆண்டுக்கான (ஆங்கிலம்2020-21) வரவுசெலவுத்திட்டத்தை துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் பதிகை செய்தார்.

1. கழிமுகப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இராமநாதபுரம், விழுப்புரத்தில் கடல் நீர் நன்னீராக்கும் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ரூ.3,041 கோடி மதிப்பில் இந்தத் திட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிலையங்களும் 6கோடி லிட்டர் நன்னீராக்கத் திறன் கொண்டதாக இருக்கும்.
3. ஆக்கிரமிப்பு நிலங்கள் 7,233 ஏக்கர்  மீட்கப்பட்டு கோயில்கள் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
4. பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு 966 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5. கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
6. தேனி, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
7. விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
8. அறங்கூற்றுமன்றக் கட்டடங்களுக்காக ரூ.1,317 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
9. உழவர் பாதுகாப்புத் திட்டத்துக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று நெல்லை மாவட்டத்தில் கங்கைகொண்டானில், மாபெரும் உணவு பூங்கா அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
10. சேலம் மாவட்டம் புத்தரகவுண்டன்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் புதிதாக தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட உள்ளன.
11. இணைப்புக் கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுத்த மற்றும் பணிகள் மேற்கொள்ள ரூ.700 கோடியும், பக்கிங்காம் கால்வாய், கூவம், அடையாறு வடிகால்களை மறுசீரமைக்க ரூ.5,439 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
12. காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி முதல் வெள்ளாறு வரை இணைப்புக் கால்வாய் அமைக்கப்படும்!
13. முத்திரை தாள் வரியானது 1 விழுக்காட்டிலிருந்து 0.25 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ரூ.5,000 மிகாமல் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுவண் அரசின் சரக்குசேவை வரி எங்கே இது எங்கே மலைக்கும் மடுவுக்கும் ஆன தூரம் அல்லவா?
14. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.667 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று இளைஞர் நலனுக்காக ரூ.218 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
15. மதிய உணவு திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் ரூ.5,935 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
16. ஆதி திராவிடர் முன்னேற்றத்துக்காக ரூ.4,109 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, ஆதி திராவிடர் மாணவர்களின் கல்விக்கு ரூ.2,018 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
17. பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.1,064 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்வி வசதிக்காக ரூ.302.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
18. தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை நிறுவதற்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நடுவண் அரசு நீட் என்ற உமியைக் கொண்டு வந்து தமிழக மாணவர்களோடு வடஇந்திய மாணவர்கள் ஊதி ஊதி சாப்பிடுவார்கள்.
19. மாநில நலங்குத்துறைக்கு ரூ.15,863 கோடி ரூபாயும் தொழில்துறைக்கு ரூ.2,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
20. நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்பு படக்கருவி பொருத்தப்படும்.
21. தமிழக மீனவர்களின் 4,997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
22. நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.15,850 கோடி ஒதுக்கீடு. சென்னை சுற்றுவட்டச்சாலை திட்டங்களுக்கு ரூ.12,301 கோடி ஒதுக்கீடு. ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.5,500 கோடி
23. முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு ஒன்றுக்குக் கட்டுமானச் செலவு ரூ.2.10 லட்சமாக உயர்த்தப்படும்.
24. கரும்பு உழவர்கள் நுண்ணீர் பாசனத் திட்டத்துக்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு 6,991 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

25. ரூ.50 கோடி ஒதுக்கீட்டில் 1,364 நீர்ப் பாசனத் திட்டங்கள் முன்னெடுக்கப்பவுள்ளது. உழவர்களுக்குப் பயிர்க் கடனாக ரூ.11,000 கோடி வழங்கப்படவுள்ளது. ஒட்டுமொத்தமாக வேளாண்துறைக்கு 11,894 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
26. தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,315 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
27. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்குப் பெருந்திட்ட வளாகம் அமைக்க 550 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
28. கீழடியில் புதிய அருங்காட்சியகம் அமைக்க ரூ.12.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
29. பேரிடர் மேலாண்மைத் துறைக்கு ரூ.1,360 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று, சென்னையில் வெள்ளபாதிப்பைக் குறைக்க ஏரிகள் சீரமைப்பு பாதளச் சாக்கடைகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
30. தமிழகக் காவல்துறைக்கு ரூ.8876 கோடியும் தீயணைப்புத் துறைக்கு ரூ.405 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
31. உணவு மானியத்துக்கு ரூ.6,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதிமுக அரசு பதிகை செய்யும் கடைசி முழுநீள வரவுசெலவு இதுவாகும். 

அடுத்து ஒன்றிய பாஜக அரசின் ஊடகங்கள் பட்டியல் இட்டிருந்த வரவுசெலவுத்திட்டத்;தின் பனிரெண்டு அம்சங்களில் ஏதாவது இதுபோன்ற உப்பு சப்பு இருக்கிறதாவென்று பார்ப்போமா?

நாடாளுமன்றத்தில் ஒன்றிய பாஜக அரசின் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவுசெலவுத்திட்டத்தைப் பதிகை செய்திருந்தார்.

1. இந்தியாவில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த 5 இடங்களில் உலகத் தரத்தில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். இந்த 5 இடங்களில் தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் இடம் பெறும். (நன்று-1)
2. இந்திய உழவர்களின் வருவாய் இரட்டிப்பாகும் என அறிவிப்பு வெளியிட்ட நிர்மலா சீதாராமன், வேளாண்துறைக்கு 2.83இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். (நன்று-2)
3. சுற்றுலாவை மேம்படுத்த தனியாருடன் இணைந்து நிறைய மிடுக்கு வகை தொடர்வண்டிகள் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு பட்ஜெட்டில் போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு மட்டும் 1.7 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. (மேல்தட்டு மக்களுக்கு)
4. பெண்களுக்கான திருமண அகவை 18 என்று தற்போது உள்ள நிலையில், அதனை மீண்டும் ஆய்வு செய்து அந்த அகவை வரம்பை அதிகரிக்க சிறப்பு ஆய்வுக் குழு அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. (உப்பு சப்பு இல்லாத, மக்களை மேய்க்கும் திட்டம்)
5. ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் அரசு பங்குகளை விற்க முடிவெடித்திருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதனை எதிர்கட்சிகள் கடுமையாக கண்டித்தன. (மக்கள் சொத்தை வீணடிக்கும் திட்டம்)
6. சரக்குசேவைவரி பதிகை செய்வதற்கு புதிய எளிய வழிமுறை (உப்பு சப்பு இல்லாத, மக்களை மேய்க்கும் திட்டம்)
7. நாடு முழுவதும் 100 விமான நிலையங்கள் உருவாக்கப்படும். (மேல்தட்டு மக்களுக்கு)
8. அடுத்த 3 ஆண்டுக்குள் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மிடுக்கு மின்சார அளவிகளைப் பொருத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. (மாநில அரசின் மீதான அதிகாரத்தை நிலைநாட்டல்)

9. மீன் உற்பத்தியை 200 லட்சம் டன் என்ற அளவுக்கு அதிகரிக்க விவசாயத்திற்கும் பாசனத்திற்கும் 2.83 லட்சம் கோடி ஒதுக்கப்படும். (நன்று-3)
10. நிதிப்பற்றாக்குறையை 3.3 விழுக்காடாக வைக்க வேண்டும் என்பது நடப்பு நிதியாண்டுக்கான இலக்கு. இது அடுத்த நிதியாண்டுக்கான நிதிப்பற்றாக்குறை இலக்கு 3.8 விழுக்காடாகும் (வெற்று அறிவிப்பு)
11. காலணிகள் மற்றும் அறைகலன்கள் மீதான சுங்க வரி உயர்த்தப்படுகிறது. (மக்கள் மேய்ப்பு)
12. நிரந்தர வருமான வரிக் கணக்கு எண் உடனடியாக வழங்குவதற்கு புதிய முறை ஏற்படுத்தப்படும். (மக்கள் மேய்ப்பு)

இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்- நமக்கு அறிமுகமான நம் உள்ளூர் தலைவர்கள் முன்னெடுக்கும் மாநிலக் கட்சிகள் மட்டுமே நமக்காக திட்டங்கள் வகுக்கும். ஏனென்றால் அவைகளுக்கு நம்மை மீண்டும்; மீண்டும் சந்திக்க வேண்டுமே என்கிற அச்சம் இருக்கும். 

தேசிய கட்சிகள் என்று பீற்றிக் கொள்கிற கட்சிகள் நம்மை மேய்க்கின்ற வேலையிலேயே குறியாய் இருக்கும். அந்த கட்சிகளின் மாநிலத் தலைமைகளும், கழுவி கழுவி ஊத்தினாலும் வெட்கமேயில்லாமல் எதையாவது உளறிகொட்டிக் கொண்டிருக்கும் உருபடியாக நமக்காக கட்சித் தலைமையிடம் பேசாது. மறந்தும் தேசியக்கட்சி என்ற தலைப்பில் இருக்கிறவர்களை தமிழக மக்கள் நம்பி ஏமாந்து விடக்கூடாது என்கிற செய்தி நமக்கு உணர்த்தப் படுவதாகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.