வணிக முன்னெடுப்புகள் செய்யும் தனிநபர் செல்பேசி எண்கள், தரைஇணைப்பு எண்கள் முடக்கம் செய்யப்படும் என்று, இந்திய அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், அதன் பயனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. 03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், அதன் பயனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் பயனர்கள் தங்கள் செல்பேசி அல்லது தரை இணைப்பு வழியாக எந்தவொரு வணிகம் சார்ந்த அழைப்புகளையோ அல்லது வணிகம் சார்ந்த சேதி அனுப்புதல்களையோ செய்ய வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. இப்படியான அங்கீகரிக்கப்படாத அழைப்புகள் அல்லது சேதிப் பயன்பாடு தொடரும் பட்சத்தில், குறிப்பிட்ட செல்பேசி எண் அல்லது தரை இணைப்பானது கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்கள் பயனர்களின் எண் வழியாக எந்தவொரு வணிக அல்லது சந்தைப்படுத்தல் அழைப்புகளையும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையானது இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி இருப்பதாக பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தெரிவிக்கிறது. இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வலைத்தளங்களில் கிடைக்கக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, குறிப்பிட்ட எண்ணில் வணிகப்பாடான பயன்பாட்டைக் கண்டால் அந்த செல்பேசி எண்ணைத் தடுக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு. வணிக அழைப்புகள் அல்லது சேதி செய்ய தகுதியுடைய பயனர்கள் தங்களை டிஎல்டி போர்ட்டல் அமைப்பில் பதிவு செய்ய வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது என்று தெரிவிக்கப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



