சோதனையின்போது சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.33 கோடியே 89 லட்சம் மதிப்பிலான புதிய ரூ.2 ஆயிரம் ரூபாய்தாள்கள் மணல் விற்பனை மூலம் கிடைத்த வருமானம் என்பது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, இது தொழில் மூலம் கிடைத்த வருமானம் ஆகும் என்று வருமான வரித்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 07,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு- தமிழகப் பொருளாதாரத்தையே புரட்டிப் போட்ட, ஒற்றை 2000 ரூபாய்தாளுக்கு வரிசையில் காத்திருந்து பலர் மடிந்து போன வரலாற்றுச் சோகத்தை உண்டாக்கிய மோடியின்- பணமதிப்பழிப்பில்; ரூ.500, ரூ.1,000 தாள்கள் செல்லாததாக்கப் பட்டன. இதைத்தொடர்ந்து புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. இந்தநிலையில் அடுத்த மாதத்திலேயே பிரபல தொழில் அதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது ரூ.33 கோடியே 89 லட்சம் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் கட்டு கட்டாக கைப்பற்றப்பட்டன. வங்கிகளிலும், பணம் வழங்கும் இயந்திரங்களிலும் குறைந்த அளவு பணம் எடுக்க பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்து கிடந்த போது சேகர் ரெட்டிக்கு மட்டும் கோடிக்கணக்கில் ரூ.2 ஆயிரம் ரூபாய்தாள்கள் கிடைத்தது எப்படி? என பரபரப்பாக பேசப்பட்டது. இதுதொடர்பாக நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி சேகர்ரெட்டி மீது தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்தது. அதேபோன்று பண மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து சேகர்ரெட்டிக்கு சொந்தமான சொத்துகளை முடக்கியது. இந்தநிலையில் சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் ரூ.33 கோடியே 89 லட்சம் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது, அந்தப்பணம் சேகர் ரெட்டிக்கு சொந்தமானதுதான் என்ற முடிவுக்கு வருமானவரித்துறை வந்துள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறையின் விசாரணைக்குழு, உயர் அதிகாரிகளுக்கு அளித்த அறிக்கையில், “சேகர் ரெட்டி தனது எஸ்.ஆர்.எஸ். மைனிங்ஸ் என்ற மணல் குவாரி நிறுவனத்தின் மூலம் மணல் விற்பனை செய்து வந்துள்ளார். சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ரூ.33 கோடியே 89 லட்சம் மதிப்பிலான புதிய ரூ.2 ஆயிரம் ரூபாய்தாள்கள் இந்த மணல் விற்பனை மூலம் கிடைத்த வருமானம் என்பது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, இது தொழில் மூலம் கிடைத்த வருமானம் ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (மணல்மாபியா, மணல்கொள்ளை இந்தத்தலைப்பில் எல்லாம் சேகர்ரெட்டி கவனிக்கப் படவில்லை போலிருக்கிறது. சரி இருக்கட்டும்.) இதுகுறித்து சேகர்ரெட்டி கூறும்போது, “வருமான வரித்துறை சோதனைக்கு முன்பே எங்கள் நிறுவனம் முன்கூட்டியே வரியாக ரூ.31 கோடி செலுத்தி உள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் வருமானவரி கணக்கில் காட்டப்பட்டுள்ளது. அந்த பணத்துக்கும் வருமான வரி செலுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த பணம், கணக்கில் வராத பணம் என்று கூற முடியாது. அந்த அடிப்படையிலேயே வருமான வரித்துறை தனது முடிவை அறிவித்துள்ளது” என்று தெரிவித்தார். சேகர் ரெட்டி தேவலாம் 33,89,00,000க்கு இத்தனை மன உளைச்சலுக்கு ஆளானார். வெறுமனே ஆண்டுக்கு இலட்சம் ரூபாய் வருமானத்திற்கு எல்லாம் வரிச்சலுகையை உயர்த்திக் கேட்கும் தமிழக குறு முதலாளிகளும் அரசு அதிகாரிகளால் இதே போன்ற தொல்லைகளைத்தானே அனுபவித்து வருகின்றனர். சேகர் ரெட்டிக்கு தீர்வு கிடைத்தது. அவர்களுக்கு தீர்வுக்காய் போராட வசதியும் இல்லாமல், கடைசியில் கடன்பிரச்சனையால் குடும்பத்தோடு தூக்கில் தொங்கினார்கள் என்ற செய்தியாகத்தானே முடிகிறார்கள். அரசு அதிகாரிகள் அள்ளித் தெளிக்கும் அவசரக் கோலத்திற்கு ஒரு முடிவு வந்தால் தேவலாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,191.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



