ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் பெண் வதைக் குற்றங்கள் என்பதான பட்டியலை ‘மக்களாட்சி நோக்கிய சீரமைப்பிற்கான சங்கஅவை’ (Association for Democratic Reforms) மக்களாட்சி நோக்கிய சீரமைப்பிற்கான நோக்கத்திற்காக வெளியிட்டிருக்கிறது. 28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடாளுமன்றத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், நாட்டில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றிய ஆய்வு வெளியாகியுள்ளது. அதன்படி, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது 16 வழக்குகள் உள்ளன. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது 7 வழக்குகள் இருக்கின்றன. மாநிலங்களவை உறுப்பினர்கள் மீது, பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2 பாலியல் குற்றங்கள் இருந்தன. தற்போது, அது 19 ஆக உயர்ந்துள்ளன. மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களாகப் போட்டியிட்டவர்கள் மீது 126 பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமைகளில் தொடர்புடைய 42 பேருக்குத் தேர்தல்களில் அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளன. பாரதிய ஜனதா கட்சி சட்டமன்றம், மாநிலங்களவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்ட 66 பேருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 46 பேருக்கும் பகுஜன் சமாஜ் கட்சி 40 பேருக்கும் வாய்ப்பு அளித்துள்ளன. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேர்கள் பெண்களுக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா (தலா 12 பேர்) மாநிலங்கள் அடுத்த இடத்தைப் பிடித்துள்ளன. தற்போதைய 759 பாராளுமன்ற உறுப்பினர்கள் 4,063 சட்டமன்ற உறுப்பினர்கள் வேட்புமனுக்களை ஆய்வு செய்ததில் இத்தகைய அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. பழந்தமிழகத்தில், தமிழ்மன்னர்களை, தமிழாய்ந்த புலவர் பெருமக்கள், நெறிப்படுத்தி மக்களுக்கு நல்லாட்சி பெற்றுத்தந்ததைப் போல- ஊடகங்கள் நினைத்தால், இந்தக் குற்றவாளிகளை மக்களுக்கு அடையாளங்காட்டி, அரசியலைத் தூய்மைப் படுத்திட உறுதியாக முடியும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,366.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



