Show all

தனிச்சாலை அமைத்து புதிய வகைப் போராட்டம்! உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி வரிவிலக்கு கோரி ஒரு கிராம மக்கள்

இந்தியாவின் அனைத்து சுங்கச்சாவடிகளிலும், விரைவுக்கட்டு புதிய முறையால், உள்ளூர் மக்களுக்கு கட்டணச் சலுகைக்கான அடையாள அட்டை கைவிடப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி வரிவிலக்கு கோரி ஒரு கருநாடகத்தில் ஒரு கிராம மக்கள் தனிச்சாலை அமைத்து புதிய வகைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
 
26,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடமிருந்து, அந்தப் பயணச் சாலை அமைத்த கட்டணத்தை வசூலிக்கும் அதிகார நடைமுறை அந்தப் பயணச் சாலை அமைத்த தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த நிறுவனங்கள் அந்த வகைக்கு சுங்கச்சாவடிகள் அமைத்து சுங்கக்கட்டணம் வசூலித்து வருகின்றன.

பயணச் சாலை அமைத்த தனியார் நிறுவனங்கள், சாலை அமைத்த செலவுக்கு அதிகமாகவே சுங்கவரி வசூலித்து விட்டன. எனினும் தொடர்ந்தும் சுங்கக் கட்டணம் வசூலித்து வருகின்றன என்பதான விழிப்புணர்வு வாகன உடைமையாளர்களிடம் அண்மைக்காலமாக தீயாகப் பரவத் தொடங்கிவிட்டது.

இந்தக் காரணம் பற்றி அனைத்து சுங்கச்சாவடிகளிலும்- தங்களுக்கு சுங்கவரி செலுத்துவது மட்டுமல்லாமல், மரியாதைக் குறைவு, கால தாமதம், சில்லறைத்தட்டுப்பாடு, ஹிந்தி உள்ளிட்ட பிறமொழி ஊழியர்களின் தெனாவெட்டு போன்ற நெருக்கடிகளால் வாகன உடைமையாளர்கள் கொந்தளிக்கத் தொடங்கினர். சுங்கக்கட்டணம் செலுத்துவதற்கான தேவை எழவேயில்லை என்று விவாதித்து சண்டையிட்டனர்.

இந்த நிலையில் ஒன்றிய பாஜக அரசு சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் வரி நேரடியாக தங்களுக்கே வந்து சேரும் வகைக்காக, அனைத்து வாகனங்களுக்கும் விரைவுக்கட்டு (பாஸ்டேக்) நடைமுறையைக் கட்டாயமாக்கியுள்ளது.

பழைய சுங்க வசூல் முறையில், சுங்கச்சாவடி வழியாக அடிக்கடி பயணிக்க வேண்டிய நிலையில் உள்ள உள்ளூர் மக்களுக்கு கட்டணச் சலுகைக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ஒன்றிய பாஜக அரசு சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும்வரி நேரடியாக தங்களுக்கே வந்து சேரும் வகைக்காக, அனைத்து வாகனங்களுக்கும் விரைவுக்கட்டு (பாஸ்டேக்) நடைமுறையை கட்டாயமாக்கப்பட்ட பிறகு, இந்த வகையான உள்ளூர் மக்களுக்கு இந்தியாவின் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணச் சலுகைக்கான அடையாள அட்டை கைவிடப்பட்டுள்ளது. 

இதனால் இந்தியாவில் பல கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி சிக்கல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கருநாடகத்தில் ஹெஜமாடி கிராம மக்கள், இந்த வகையான பாதிப்புக்கு எடுத்த எதிர்நடவடிக்கை இந்தியா முழுவதும் பரபரப்பு கிளப்பியுள்ளது.

இந்த கிராம மக்களின் சுங்கச்சாவடியில் கட்டணச்சலுகைக்கான கோரிக்கையை அதிகாரிகள் நிறைவேற்ற மறுத்ததால், அவர்கள் சுங்கச்சாவடியை ஒட்டி தற்போது தனியாக சாலை ஒன்றை அமைத்து விட்டனர். 

மங்களூர்-உடுப்பி நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடியை ஒட்டி இந்த புதிய சாலையை கிராம மக்கள் அமைத்துள்ளனர். அனைத்து வாகனங்களுக்கும் (விரைவுக்கட்டு) பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்ட பின்னர், ஹெஜமாடி கிராம மக்களுக்கு சலுகை வழங்கப்படவில்லை. எனவே சலுகை வழங்க வேண்டும் என பஞ்சாயத்து தரப்பில் இருந்து அதிகாரிகளிடம் முறையிடப்பட்டது. இதன்பேரில் ஹெஜமாடி கிராமத்தில் உள்ளூர் வாகனங்களுக்குச் சலுகை வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என கூறப்படுகிறது. 

இதனால் கிராம பஞ்சாயத்து அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. இதன்பின் ஜேசிபி இயந்திரத்தை வாடகைக்கு எடுத்த கிராம மக்கள், சுங்கச்சாவடியை ஒட்டி தனியாக தற்காலிமான சாலை ஒன்றை அமைத்து விட்டனர். புதிய சாலை அமைக்கப்படுவது குறித்த தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், சாலை அமைக்கும் பணிகளை நிறுத்தவில்லை. அதற்கு மாறாக எங்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் முதலில் நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 

அதிகாரிகளுக்கும், கிராம மக்களுக்கும் இடையே நீண்ட நேரமாக வாக்குவாதம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் இனிமேல் உள்ளூர் வாகனங்களுக்குச் சலுகை வழங்கப்படும் என அதிகாரிகள் எழுத்துப்பாடாக உறுதிமொழி அளித்தனர். ஆனால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாலைகளை உள்ளூர் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் பயன்படுத்தத் தொடங்கி விட்டன. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.