28,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அகில இந்திய அளவிலான பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் தமிழ் வினாத்தாளில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 196 மதிப்பெண்களை தமிழில் தேர்வு எழுதிய மாணவ,மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தொடுத்த வழக்கில் உயர்அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மேலும் கலந்தாய்வை நிறுத்தி புதிய தரவரிசைப்பட்டியல் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இத்தீர்ப்பு குறித்து டி.கே.ரங்கராஜன், இத்தீர்ப்பால் தமிழில் தேர்வு எழுதிய பெரும்பாலான மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். புதிய தரவரிசைப்பட்டியலை வெளியிட்டு மீண்டும் கலந்தாய்வு நடத்த வேண்டும். ஏற்கெனவே கலந்தாய்வு மூலம் மருத்துவப்படிப்பிற்கு சென்றவர்களுக்கு ஒரு பாதிப்பும் வராது. தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லுரிகளில் இடங்களை அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் தமிழகத்திற்கு கூடுதலான நல்ல மருத்துவர்கள் கிடைப்பார்கள் என்று கூறியிருந்தார். ஆனால், தவறான வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்பதும், அதனடிப்படையில் புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப் பட வேண்டும் என்பதும் நடுவண் இடைநிலை கல்வி வாரியத்திற்கு உயர்அறங்கூற்றுமன்றம் பிறப்பித்துள்ள ஆணை மட்டுமே என்றும், மருத்துவக் கலந்தாய்வை நிறுத்தி வைக்கும்படி தங்களுக்கு நேரடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதால் மருத்துவக் கலந்தாய்வை தொடரப்போவதாகவும் இந்திய மருத்துவக் குழுவின் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனினும், 196 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்று உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டதால், ஏற்கனவே வெளியிடப்பட்ட தரவரிசை செல்லாததாகிவிட்டது. புதிய தரவரிசை அடிப்படையில் புதிதாக கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று உயர்அறங்கூற்றுமன்றம் கூறிவிட்டது. எனவே பழைய கலந்தாய்வை கட்டாயம் நிறுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் வலியுறுத்தினர். இதனிடையே, உயர்அறங்கூற்று மன்ற உத்தரவை எதிர்த்து நீட் தேர்வை நடத்திய நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய அமைப்பு உச்ச்அறங்கூற்று மன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்ட உயர் அறங்கூற்று மன்ற மதுரை கிளை ஆணை வரும் வரை மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது. வரும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும் நிறுத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்வழியில் பயிலும் மாணவர்களின் வாழ்க்கையில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளக்கூடாது என்று தீர்ப்பை வழங்கிய உயர் அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர்கள் வலியுறுத்தி கூறியிருந்தனர். தற்போது கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய அமைப்பு புதிய தரவரிசைப்பட்டியலை வெளியிட்டு, கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை தொடர வேண்டும். அதைவிடுத்து தமிழ் மாணவர்களின் மருத்துவக்கல்வி கனவை சீரழிக்கும் வகையில் நடுவண்இடைநிலைக் கல்வி வாரிய நடவடிக்கை அமையக்கூடாது என்று மாணவர்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கல்வியாளர்களும் வலியுறுத்தியுள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,846.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



