Show all

சசிகலா நடராசன், நாளை விடுதலையாவதாக தகவல் பரவி வருகிறது.

சசிகலா விடுதலை செய்யப்படும், நாளன்று மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைக் கர்நாடக உள்துறை வெளியிட்டுள்ளது.

11,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சசிகலா நடராசன், நாளை இரவு 9.30 மணிக்கு விடுதலையாவதாக தகவல் பரவி வருகிறது. சசிகலா விடுதலை செய்யப்படும் நாளில் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைக் கர்நாடக உள்துறை வெளியிட்டுள்ளது.

செயலலிதாவின் உதவியாளரான சசிகலா அதிமுக கட்சியிலும் மகுந்த ஆதிக்கம் பெற்றிருந்தார். செயலலிதா மறைவுக்குப் பிறகு அவர் தமிழக முதல்வர் நாற்காலிக்கு குறிவைத்த நிலையில், அதற்கு எதிர் நடவடிக்கையாக அவர் மீது இருந்த சொத்துக் குவிப்பு வழக்கு வேகமாக முடுக்கப்பட்டு, நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நாற்காலிக்கு ஆசைப்பட்டதற்கு நாற்காலி வாய்ப்புக்காலம் முடியும் வரை தண்டனை வழங்கியாயிற்று. தண்டனை காலம் இப்போது நிறைவடைய உள்ளது. 

தமிழக சட்ட மன்றத் தேர்தலைக் குறிவைத்து பல்வேறு அரங்கேற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நாளை சசிகலா விடுதலையாவார் என்றும், அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால் சிறை தண்டனை நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சசிகலாவின் அபராதத் தொகையான ரூ.10 கோடியே 10 லட்சத்தை முறைப்படி அவர் அறங்கூற்றுமன்றத்தில் செலுத்தியுள்ளதால், அவரது விடுதலை உறுதியாகியுள்ளது. 

இந்த நிலையில், சசிகலா விடுதலை செய்யப்படவுள்ள நாளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கர்நாடக உளவுத்துறை அளித்துள்ள அறிக்கை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதில்,

சசிகலா விடுதலை செய்யப்படவுள்ள நாளில் ஏராளமான தொண்டர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா  சிறை வளாகத்தில் கூட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சிறை வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு வர முடியாத வகையில் எல்லையிலேயே தடுத்து நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

வழக்கமான கைதிகளுடன் சசிகலாவை விடுதலை செய்யாமல் அவரது பாதுகாப்பு கருதி தாமதமாக விடுதலை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. நாளை விடுதலை செய்யப்படவிருக்கிற மற்ற கைதிகளை இரவு 7.30 மணிக்கும், சசிகலாவை 9.30 மணிக்கும் விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகலாவை கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரை உரிய பாதுகாப்புடன் அழைத்து சென்று அங்கு அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வாகனத்தில் அனுப்பி வைக்க திட்டம். இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும், விடுதலை செய்யப்படும் நாளன்று நிலவும் சூழலுக்கு ஏற்ப இதில் சில மாற்றங்களும் ஏற்படலாம். இந்த நிலையில் சசிகலாவின் விடுதலை தமிழக அரசியலில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.