Show all

நம்ம காவல்துறை கெத்து! ஒன்றியக் குற்றப்புலனாய்வுத் துறை மீது தமிழக குற்றப்புலனாய்வுத்துறை வழக்கு. இந்தியாவில் இது முதலாவது

ஒன்றியக் குற்றப்புலனாய்வுத்துறை காவலில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒன்றியக் குற்றப்புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) மீது தமிழக குற்றப்புலனாய்வுத்துறை (சி.பி.சி.ஐ.டி) காவல்துறையினர் வழக்கு.

11,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில் ஒன்றியக் குற்றப்புலனாய்வுத்துறை காவலில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒன்றியக் குற்றப்புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) மீது தமிழக குற்றப்புலனாய்வுத்துறை (சி.பி.சி.ஐ.டி) காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.

சென்னையில் தங்கம் இறக்குமதியில் ஈடுபட்டுவந்த சுரானா நிறுவனம் முறைகேடு செய்வதாக ஒன்றியக் குற்றப்புலனாய்வுத் துறைக்கு (சி.பி.ஐ) புகார் சென்றது. இதையடுத்து, சென்னை என்.எஸ்.சி போஸ் சாலையில் இருந்த அந்த நிறுவனத்தில் ஒன்றியக் குற்றப்புலனாய்வுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில் சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கக்கட்டிகள், நகைகள் உட்பட 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அவை எடை பரிசோதிக்கப்பட்டு சுரானா நிறுவனத்தின் பாதுகாப்பு அறைகளிலேயே ஒன்றியக் குற்றப்புலனாய்வுத் துறை முத்திரையுடன் மூடி வைக்கப்பட்டன.

அந்தப் பாதுகாப்பு அறைகளின் சாவிகள் சென்னை ஒன்றியக் குற்றப்புலனாய்வுத் துறை சிறப்பு அறங்கூற்றுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாக ஒன்றியக் குற்றப்புலனாய்வுத் துறை தெரிவித்திருக்கிறது. ஆனால், அந்தச் சாவிகள் எப்போது அறங்கூற்றமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன என்ற தகவல்களை ஒன்றியக் குற்றப்புலனாய்வுத் துறை தெரிவிக்கவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பாட்டில், இரண்டாவது வழக்கு பதிவு செய்த ஒன்றியக் குற்றப்புலனாய்வுத் துறை குறிப்பிட்ட தங்கம் முதல் வழக்கோடு தொடர்புடையதில்லை; வெளிநாட்டு வணிகக் கொள்கையை மீறியதாகப் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது வழக்கோடு தொடர்புடையது என்று கூறியது. 

ஒன்றியக் குற்றப்புலனாய்வுத் துறையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அறங்கூற்றுமன்றம், பறிமுதல் செய்யப்பட்ட 400.47 கிலோ தங்கம், அது தொடர்பான ஆவணங்களை இரண்டாவது வழக்குக்கு மாற்றியது. அந்தத் தங்கம் ஏற்கெனவே பாதுகாப்பு அறைகளில் இருப்பதால், அறங்கூற்றுமன்றம் அது குறித்து நேரடியாக ஆய்வு நடத்தவில்லை. ஆவணங்களில் மட்டுமே இந்த மாற்றம் நடந்தது.

இந்தநிலையில், சுரானா நிறுவனத்தின் முறையீட்டின் பேரில் அந்தத் தங்கத்தை வங்கிகளில் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட இராமசுப்ரமணியன் முன்னிலையில், சுரானா நிறுவன பாதுகாப்புஅறைகள் திறக்கப்பட்டு தங்கத்தின் எடை பத்து மாதங்களுக்கு முன் சரிபார்க்கப்பட்டது. அப்போது, 103.864 கிலோ அளவுக்குத் தங்கம் மாயமாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் சிறப்பு அதிகாரி இராமசுப்ரமணியன் முறையிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் அறங்கூற்றுமன்றம், தமிழக குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறைக்கு விசாரணைக்கு இரண்டு கிழமைகளுக்கு முன்பு உத்தரவிட்டது. தமிழக குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறையின் காவல்துறை கண்காணிப்பாளர் தகுதியிலான அதிகாரி மூலம் ஆறு மாதங்களில் விசாரணையை நடத்தி முடிக்கவும் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, வழக்கின் விசாரணை அதிகாரியாக தமிழக குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் நியமிக்கப்பட்டார். இந்தப்பாட்டில் குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க தமிழக குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை விசாரணையில் இறங்கியிருக்கும் நிலையில், இந்த வழக்கில் முதற்கட்டமாக ஒன்றியக் குற்றப்புலனாய்வுத் துறையின் மீது தமிழக குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். ஒன்றியக் குற்றப்புலனாய்வுத் துறையினர் மீது தமிழக குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறையினர் வழக்கு பதிவது இந்தியாவிலேயே இது முதன்முறை. 

இந்தச் சூழலில், சென்னை வந்திருக்கும் ஒன்றியக் குற்றப்புலனாய்வுத்துறை சிறப்புப் பிரிவு அதிகாரிகள், சுரானா பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மாயமான பாட்டில் தனியாக விசாரணையைத் தொடங்கி நடத்திவருகிறார்கள். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.