நண்பர் இரஜினிகாந்த் விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள் என கமல்ஹாசன் கீச்சுப் பதிவு வெளியிட்டுள்ளார். 10,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சிவா இயக்கத்தில் இரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய தொழில் நுட்பக் கலைஞர்கள் 4 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து நடிகர் இரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது. இதற்கிடையில், நடிகர் இரஜினிகாந்த் இன்று திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. நடிகர் இரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது எனவும், அவர் நலமாக உள்ளார் எனவும் இன்று இரவு மருத்துவமனையில் இருப்பார் எனவும் அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நடிகர் இரஜினிகாந்த் முழுமையாக விரைவில் குணமடைய கொண்டாடிகள், திரைப்படத் துறையினர், அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன்- நடிகர் இரஜினிகாந்த் குணமடைய கீச்சுப்பதிவில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



