ஆங்கிலம் படிப்பதும் உலகத் தொடர்பில் இருப்பதும் தமிழனப் பாதுகாப்புக்கானதாகும்! அதற்கு ஆங்கில வழிக்கல்வியை, அதுவும் தனியார் வழிக்கல்வியை நம்பி ஆபத்தை விலைகொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறான் தமிழன். அவைகள் தமிழன் தங்கீலீசு அல்லது பண்ணி இங்கிலீஸ் படிப்பதில் பெருமை பீற்றிக் கொள்ளக் கற்றுக்கொடுக்கின்றன. 25,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆங்கிலம் படிப்பதும் உலகத் தொடர்பில் இருப்பதும் தமிழினப் பாதுகாப்புக்கானதாகும், என்கிற பாடத்தை- பிரித்தானிய ஆட்சிகாலத்து இந்தியாவில்- காங்கிரசின் இரட்டை ஆட்சிமுறையில் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட ஹிந்தி- காங்கிரஸ் இரட்டை ஆட்சிமுறையில் இருந்து விலகிக் கொண்ட நிலையில்- மீண்டும் நேரடி பிரித்தானிய ஆட்சியால் (ஹிந்தித் திணிப்பு) விலக்கப்பட்ட போதே நன்றாக கற்றிருந்தது தமிழகம். பிரித்தானியர் வருகையின் போது, எந்த வளர்ச்சியும் இல்லாமல், மூடநம்பிக்கைகளின் முடை நாற்றத்தோடு, சாதிய ஏற்றதாழ்வுகள் கோலோட்ச, துண்டு துக்கடாவாகக் கிடந்த இந்தியாவை பிரித்தானியர் ஒருங்கிணைத்த நிலையில் ஆங்கிலம் அலுவல் மொழியாக தன்னிச்சையாக வளர்ந்திருந்தது. பிரித்தானியர் இந்தியாவை விடுவித்த போது, இந்திய ஒன்றிய ஆட்சி ஹிந்தி பேசும் தலைவர்களைக் கொண்ட காங்கிரசிடம் கிடைத்தது. அப்போது அவர்கள் செய்த முதல்வேளை- அலுவல் மொழியாக வளர்ந்திருந்த ஆங்கிலத்தை அப்புறப்படுத்தி ஹிந்தியை அந்த இடத்தில் நிறுவுவதுதான். புதினைந்து ஆண்டுகளுக்குள் ஆங்கிலத்தை இந்தியாவில் இருந்து அகற்றிவிட்டு ஹிந்தி மட்டுமே இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்று சட்டமும் நிறைவேற்றினார்கள். ஹிந்தி வளர்ச்சிக்காக ஓர் அமைச்சகத்தையும் நிறுவினார்கள். அந்தச் சட்டத்தின் அடிப்படையில், பதினைந்து ஆண்டுகள் கழித்து 1965ல், காங்கிரஸ் அரசால் வலுக்காட்டாயமாக ஹிந்தி திணிக்கப்பட்டது. அப்போது தமிழகம் முன்னெடுத்த ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் பலர் பலகாலம் சிறையில் கிடந்தனர். சிலர் துப்பாக்கிக் குண்டுக்கு பலியும் ஆகினர். அ. ஆதிக்க சாதியாக நீங்கள் ஹிந்தி என்கிற ஒரு மொழிமட்டும் கற்பதும், நாங்கள் எங்கள் தமிழோடு முன்பே ஆங்கிலம் கற்றிருக்கிற நிலையிலும், ஆங்கிலத் தொடர்பில் எங்களில் பலர் பிழைப்பு பெற்றிருக்கிற நிலையிலும், நாங்கள் மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்க வேண்டிய கட்டாயத் தேவை என்ன? ஆ. நீங்கள் உங்கள் ஹிந்தியோடு எங்களைப் போலவே முன்பே ஆங்கிலம் கற்றிருக்கிற நிலையிலும், ஆங்கிலத் தொடர்பில் உங்களில் பலர் பிழைப்பு பெற்றிருக்கிற நிலையிலும், நீங்கள் தொடர்ந்து ஆங்கிலம் கற்றால் உங்களுக்கு ஹிந்தி ஆங்கிலம் இரண்டு மொழி, எங்களுக்கும் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழி, இதுதானே இந்திய மக்கள் அனைவரும் பெற்ற விடுதலையாக இருக்க முடியும். இ. நீங்கள் மட்டும் ஆங்கிலேயரிடம் இருந்து பெற்ற விடுதலையோடு ஆங்கில மொழியில் இருந்தும் விடுதலை பெற முனைவீர்கள். நாங்கள் புதியதாக ஹிந்தி மொழிக்கு அடிமையாகி, ஆங்கிலேயரிடம் இருந்து பெற்ற விடுதலையை உங்களுக்கு, அதாவது ஹிந்தி மொழிக்காரர்களுக்கு மடைமாற்றித் தரவேண்டிய கட்டாயம் என்ன? அப்படியானால் எங்களுக்கு விடுதலையே இல்லையா என்று தமிழர் போராடியும், சில உயிர்களை இழந்தும் மேற்கண்ட மூன்று தலைப்புகளின் கீழ் நாம் கேட்ட விடுதலையை இன்றுவரை சட்டமாக்கிக் கொள்ள வில்லை. இன்று வரை ஆங்கிலம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் ஹிந்தி நிறுவப்படவேண்டும் என்பதே சட்டமாக இருக்கிறது. அதனால் உலக நாடுகளில் இந்தியா என்றால் ஹிந்தி என்றே நிறுவப்பட்டிருக்கிறது. தமிழகம் முன்னெடுத்த ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தால்- அதற்கு நேரு கொடுத்த உறுதிமொழியால்- நம் மீது ஹிந்தி திணிக்கப்பட முடியாமல் இருக்கிறது. அந்த உறுதி மொழி என்ன? ஹிந்தி பேசாத மக்கள் விரும்பாத வரை ஹிந்தி திணிப்பு இல்லை (விரும்பினால் ஹிந்தித் திணிப்பு உண்டு) ஆங்கிலமே தொடரும் என்பதாகும். இதனால், ஒன்றிய அரசு அவ்வப்போது ஹிந்தியை நம்மீது திணிக்க சட்டத்தில் தெளிவாக இடம் இருக்கிறது. அவர்கள் ஹிந்தியைத் திணிக்கும் ஒவ்வொரு முறையும் நாம் கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும். அப்போது அவர்கள் சரி சரி நீங்கள் விழித்திருக்கின்றீர்களா என்று சூடுபோட்டு பார்த்தோம் அவ்வளவுதான் அடங்குங்கள் என்று சொல்ல நாம் அடங்கி வடவேண்டும். இப்படித்தான் தமிழர்களால்- ஆங்கிலம் படிப்பதும் உலகத் தொடர்பில் இருப்பதும் தமிழினப் பாதுகாப்புக்கானதாகும், என்கிற படிப்பினையின் அடிப்படையில், ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக தமிழகக் கல்வி முறையில் முன்னெடுக்கப் பட்டு வருகிறது. இந்தக் கல்வி முறைதான் நமக்கு பாவாணர், அப்துல் கலாம், இறையன்பு, போன்றவர்களையெல்லாம் நமக்கு கொடுத்திருக்கிறது. ஆங்கிலம் படிப்பதும் உலகத் தொடர்பில் இருப்பதும் தமிழினப் பாதுகாப்புக்கானதாகும், என்கிற படிப்பினையை தங்கள் சொந்த ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளும் வகையாக ஆங்கிலம் ஒரு மொழிப்பாடம் என்பதை மாற்றி ஆங்கில வழியிலேயே அனைத்து பாடங்களும் என்பதாக தனியார் ஆங்கில வழிப்பள்ளிகள் தமிழகத்தின் சந்து பொந்துக்கள் எல்லாம் கிளைக்கத் தொடங்கின. அந்த வகைப்பள்ளிகள் அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்தில் கற்பிக்க முயன்ற நிலையில், அந்த பள்ளிப்பிள்ளைகள் கற்றுக் கொண்டு வருவது என்னவோ தங்கீலீசு அல்லது பண்ணி இங்கீலீசாகவே இருக்கிறது. அந்த குழந்தைகளின் பெற்றோரும் அந்தப் புதிய மொழியில்தாம் தங்கள் குழந்தைகளோடு உரையாடுகின்றார்கள். அந்தப்பிள்ளைகளும் பெற்றோர்களும் ‘அன்ன நடை கற்கப் புகுந்த நிலையில் தன்னடையும் இழந்தாற்போல’ என்ற சொலவடைக்கு ஏற்ப, தாய்மொழியான தமிழிலும் புலமையில்லாதவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பேசுவது பிழையான ஆங்கிலம். பிழையான தமிழ். ஆங்கிலம் படிப்பதும் உலகத் தொடர்பில் இருப்பதும் தமிழினப் பாதுகாப்புக்கானதாகும், என்கிற படிப்பினையின் அடிப்படையில். ஆங்கிலத்தை ஒரு பாடமொழியாகவும் மற்றபாடங்களை இயல்பான அறிவூக்கத்திற்காக தமிழிலும் படிப்பதே சிறந்தது. தமிழ்வழிக் கல்வியே சிறந்தது என்று அறிந்தும் கூட நிறைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக தனியார் பள்ளிகளை நாடுகின்றனர்.
அரசுப்பள்ளிகளில் பாதுகாப்பின்மையை உணர்ந்தால், பெற்றோர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டுமேயன்றி தனியார் வணிகப்பள்ளிகளை தீர்வாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தனியார்ப் பள்ளிகள் சமூக அக்கறையோடு தமிழ்வழிக் கல்வியில் ஒரு வகுப்பைத் தொடங்கி படிப்படியாக தமிழ்வழிக்கல்விக்கு மாற முயலலாம்.
தமிழ்ஆர்வலர்களாவது தனியார் தமிழ்வழிப் பள்ளிகளைத் தொடங்கி ஆங்கிலவழிப் பள்ளிகளோடு மோதி அவைகளின் வணிக நோக்க முகத்திரையைக் கிழிக்கலாம்.
தமிழ்நாடு அரசாவது, தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்திருப்பவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களாக தொடர முடியாது என்று சட்டமியற்றி அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தலாம். வழிகள் ஆயிரம் இருக்கத்தான் செய்கின்றன. நாம் முனையாமல் யார் குட்டினாலும் குனிகிறோம் என்பதுதாம் தமிழர்களது குறை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



