Show all

க/பெ.ரணசிங்கம் படம் எப்படியிருக்கு!

மிகச்சில குறைகள் இருந்தாலும், மிகத் துணிச்சலான  கதைக்களத்தைக் கொண்டுள்ளது க/பெ.ரணசிங்கம். நியாயம் கேட்டுப் போராடும் காட்சிகளில் கதையின் கனம் தாங்கும் அரியநாச்சியாக அசத்துகிறார் ஐசுவர்யா ராஜேஷ்.

25,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: க/பெ.ரணசிங்கம் படம் குறித்து முதன்மையாகத் தெரிவிக்க வேண்டிய செய்தி இந்தப்படம் கதைத்தலைவிக்கு முதன்மைத்துவம் பாராட்டும் படம். அந்தக் கதைத்தலைவி அரியநாச்சியாக ஒளிரும் ஐசுவர்யா ராஜேஷ். 

வளர்ச்சி அரசியலின் பேரால் உறிஞ்சப்படும் தண்ணீருக்காக உரிமை தாகத்துடன் போராடும் போராளி ரணசிங்கம், குடும்பத்தைக் காப்பாற்ற துபாய்க்கு வேலைக்குச் செல்கிறார். திடீரென ஒருநாள் கலவரத்தில் அவர் இறந்துவிட்டதாகச் சொல்லப்பட, தன் கணவரின் சடலத்தைப் பெற, அடாவடி அதிகாரத்தைக் கொண்ட அதிகாரிகளுடன் அரியாநாச்சி நடத்தும் போராட்டம்தான் கதை.

விஜய்சேதுபதியைக் கலாய்த்துக் காதலிக்கும் இடத்தில் கலகலப்பான அரியநாச்சியாகவும், நியாயம் கேட்டுப் போராடும் காட்சிகளில் கதையின் கனம் தாங்கும் அரியநாச்சியாகவும் பரிமாணங்கள் காட்டி அசத்துகிறார் ஐசுவர்யா ராஜேஷ். சில குறைகள் இருந்தாலும், மிகத் துணிச்சலான  கதைக்களத்தைக் கொண்டுள்ளது கஃபெ.ரணசிங்கம்

க/பெ. ரணசிங்கம் படம் ஜீ பிளெக்ஸ் எண்ணிமத் தளத்தில் கடந்த கிழமை வெளியாகி, இதுவரை எண்ணிமத் தளங்களில் வெளியான படங்களில் இது சிறப்பு என்று பேசப்பட்டு வருகிறது. ரூ. 199 செலுத்தி க/பெ. ரணசிங்கம் படத்தை ஜீ5 எண்ணிமத் தளத்தில் இந்தப்படத்தை நாம் பார்க்க முடியும்.

இந்நிலையில் கஃபெ. ரணசிங்கம் படம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று திரையரங்கிலும் வெளியாகவுள்ளது. இதுபற்றி இப்படத்தினைத் தயாரித்த கேஜேஆர் நிறுவனம் வெளியிட்டுள்ள கீச்சுவில் கூறியுள்ளதாவது: 

உங்கள் அருகில் உள்ள திரையரங்குகளில் - இதைச் சொல்ல எவ்வளவு நாள்கள் காத்திருந்தோம். எங்கள் அனைவருக்குமே இது உணர்வுபூர்வமான தருணம். உங்களுக்குத் திரையரங்கு அனுபவத்தைத் தர நாங்கள் மீண்டும் வந்துள்ளோம். க/பெ ரணசிங்கம் படத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் திரையரங்கில் பாருங்கள் என்று கூறியுள்ளார்.

திரையரங்குகள் வரும் வியாழக்கிழமை முதல் செயல்படத் தொடங்கும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில், ஒவ்வொருவரும் ஒரு இடம் விட்டு அமரும் வகையிலும் 50 விழுக்காடு பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் வகையிலும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதாக ஒன்றியத் தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

க/பெ. ரணசிங்கம் இயக்குனர் பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளரான கொட்டப்படி.ஜெ.ராஜேஷ் தனது கே.ஜெ.ஆர் நிறுவனம் மூலம் தயாரிக்க, கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

இத்திரைப்படத்தில் ரணசிங்கத்தின் தங்கையாக புதுமுக நடிகை பவனிசிறி நடித்துள்ளார். இவர் தமிழ் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமாரின் தங்கை ஆவார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.