Show all

உயிர் தப்பினார் டிரம்ப்: துப்பாக்கியுடன் டிரம்ப் மீது பாய வந்த மர்ம நபர் கைது

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்த பாய்ந்தார். உடனே சுதாரித்த அவரது பாதுகாவலர்கள் டிரம்பை பாதுகாப்பாக அழைத்துகொண்டு சென்றனர். இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது ஒரு கையெழுத்தால் ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றும் வலிமை கொண்டது அமெரிக்க அதிபரின் கையெழுத்து. அந்த அதிபரின் தேர்தலுக்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை மிகவும் பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் உள்ளாகியுள்ளது. முன்பு அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்கள் தங்கள் பதவிக் காலத்தில்தான் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர். ஆனால், இப்போது, அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவருமே குற்றச்சாட்டுகளுடனும், சர்ச்சைகளுடனும்தான் தேர்தலையே சந்திக்கின்றனர். இந்நிலை, இன்னும் இரு நாட்களே உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் டொனால்டு டிரம்ப், நெவடா மாநிலம் ரெனோ நகரில் நடைபெற்ற கருத்துப் பரப்புதல் கூட்டத்தில் நேற்றிரவு உரையாற்றிகொண்டிருந்தார். அப்போது, திடீரென்று கூட்டத்திலிருந்த மர்ம நபர் ஒருவர் டிரம்ப் மீது தாக்குதல் நடத்த பாய்ந்துள்ளார். உடனே சுதாரித்த அவரது பாதுகாவலர்கள் டிரம்பின் உடலை கேடயம்போல் மறைத்தபடி, அவரை மேடைக்கு பின்புறமாக அழைத்து சென்றனர். அதற்குள், மேடைக்கு எதிரே இருந்த மர்ம நபரை உள்ளூர் காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். டிரம்பை கொல்லவதற்காகவே அந்த மப்ம நபர் துப்பாக்கியுடன் கருத்துப் பரப்புதல் கூட்டத்துக்கு வந்துள்ளதாக காவல்துறை சந்தேகிக்கின்றன. மர்ம நபர் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றி சென்ற பின்னர், வாய்நிறைய சிரிப்புடன் மீண்டும் மேடையில் தோன்றிய டொனால்ட் டிரம்ப் தனது உயிரை பாதுகாத்தமைக்காக ரகசிய காவலர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு தனது பேச்சை தொடர்ந்தார். டிரம்ப்பை கொல்லும் நோக்கத்தில் வந்த அந்த மர்ம நபர் யார்? அந்த நோக்கத்தின் பின்னணி என்ன? என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அந்நாட்டு மக்கள் மட்டுமல்லாது உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் நிலையில், இச்சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சில நிமிடங்கள் தாமதித்திருந்தாலும் அடுத்த சில நிமிடங்களில் உலக அரசியல் எப்படி வேண்டுமானாலும் மாறிப் போய் இருக்கலாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.