06,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவுக்கு மழை வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ. 700 கோடி மற்றும் கதார் அரசின் ரூ. 36 கோடி நிதியுதவிகளை நடுவண் அரசு ஏற்காது என தகவல் வெளியாகியுள்ளது. தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த சில வாரங்களாக கேரளாவில் பெருமழை பெய்து வந்தது. இதனால் மொத்த மாநிலமுமே வெள்ளக்காடாக மாறியது. கேரளாவை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர ரூ. 2500 கோடி தேவைப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதில் முதற்கட்டமாக நடுவண் அரசு ரூ. 600 கோடி நிதி வழங்கியுள்ளது. இதுதவிர உலகளாவி பல்வேறு மக்கள், இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம், கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ. 700 கோடியை அறிவித்தது. உலகளவில் இந்தப் பேரிடருக்கு அதிக நிதியுதவி அளிக்க முன்வந்துள்ள நாடு ஐக்கிய அரபு அமீரகம் தான். ஆனால் தற்போது இந்த நிதியுதவியை நடுவண் அரசு ஏற்காது என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல மற்ற வெளிநாடுகள் கொடுக்கும் பணத்தையும் நடுவண் அரசு அனுமதிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு சுனாமியால் தமிழகம் பாதிக்கப்பட்ட போது, வெளிநாடுகளில் வழங்கும் நிதியால் உறவில் குழப்பம் ஏற்படலாம். அதனால் குறிப்பிட்ட வெளிநாட்டு நிதியுதவிகளை ஏற்க கூடாது என்கிற சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை முன்வைத்து நடுவண் அரசு கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் ரூ. 700 கோடி நிதியை அனுமதிக்காது என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. முன்னதாக சென்னை பெருவெள்ளம், உத்தரகான்ட் வெள்ளம், குஜராத், மும்பை வெள்ளம், ஆகிய இயற்கை பேரிடர்களின் போதும் வெளிநாட்டு நிதியை நடுவண் அரசு ஏற்கவில்லை என்று தெரிகிறது. இவ்வாறான வெளியுறவுக் கொள்கையை, நடுவண் அரசில் ஆளும் கட்சிகள்தாம் முன்னெடுக்கின்றனவா? அதிகார வர்க்கத்தில் இருக்கிற மத, இனவாத அதிகாரிகள் கமுக்கமாக முன்னெடுக்கிறார்களா என்பதை மக்கள் மன்றத்திற்கு கொண்டு வந்தாக வேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,887.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



