Show all

நோட்டுகள் செல்லாது அறிவிப்பு நாட்டில் கலவரம் வெடிக்க காரணமாகலாம் கடும் எச்சரிக்கை

ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்ற நடுவண் அரசின் அறிவிப்பு நாட்டில் கலவரம் வெடிக்க காரணமாகலாம் என்று நடுவண் அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் பல நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மீதான அனைத்து விசாரணைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் நடுவண் அரசு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதி அனில் ஆர். தாவே உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நடுவண் அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது: நாடு முழுவதும் பொதுமக்கள் பணத்துக்காக அங்கும் இங்குமாக அலைவது வேதனையைத் தருகிறது. மக்கள் தங்கள் சொந்த பணத்தை எடுக்க பல மணிநேரங்கள் காத்திருக்கிறார்கள். நாடு முழுவதும் மக்களுக்கு அதிக பிரச்சனை இருப்பதால்தான் வழக்குகள் போடப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வைத் தேடி நீதிமன்றத்தை நாடும் பொழுது எங்களால் நீதிமன்றத்தின் கதவுகளை அடைக்க முடியாது. வேண்டும் என்றால் அனைத்து வழக்குகளையும் தில்லிக்கு மாற்றுவது குறித்து மட்டுமே பரிசீலிக்க முடியும். இந்த பிரச்சினை காரண்மாக நாட்டில் கலவரம் கூட வெடிக்கலாம். இவ்வாறு நீதிபதிகள் கருத்துக்களை தெரிவித்தனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.