வங்கியின் பின்புறத்தில் ஒரு வாலிபர் ஜன்னல் வழியாக பணக்கட்டு ஒன்றை பெற்றுக் கொண்டு செல்வதுபோல் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வரும் காணொளியால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8ம் தேதி அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 2ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 10ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. பொதுமக்கள் வங்கிகள் முன்பு பல மணி நேரம் கால் கடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்து புதிய நோட்டுகளை பெற்றுச் செல்கின்றனர். நடுவண் அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் பணப்புழக்கம் சரிவடைந்துள்ளதோடு மட்டுமின்றி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மாற்ற முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலையில், வங்கியின் பின்புறத்தின் ஜன்னல் வழியாக ஒருவர் பணக்கட்டு ஒன்றை பெற்றுக்கொண்டு வேகமாக நடப்பது போன்று வாட்ஸ் அப் காணொளி வைரலாக பரவி வருகிறது. அந்த காணொளியில் “பரபரப்பான ஒரு பகுதியின் மத்தியில், வங்கியின் பின்புறத்தில் ஒரு வாலிபர் நின்றுக் கொண்டு இருக்கிறார். ஒரு சில வினாடிகளில் ஜன்னல் வழியாக வங்கியின் உள்ளிருந்து யாரோ ஒருவர் ஒரு பணக்கட்டை எடுத்து கொடுக்கிறார். வெளியே நின்று இருக்கும் அந்த வாலிபர் அதனை பெற்றுக் கொண்டு வேகமாக நடப்பது போல் காட்சி பதிவாகி உள்ளது. 12வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த காணொளி காட்சி வாட்ஸ் அப்பில் நேற்றுமுதல் வைரலாக பரவி வருகிறது. அது எந்த இடம், எந்த பகுதி, தமிழகமா அல்லது வேறு மாநிலமா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. அந்த வாலிபர் நிற்கும் இடத்துக்கு பக்கத்தில் இரண்டு இருசக்கரவண்டிகள் நிற்கின்றன. அதன் பின்புறத்திலும் வாகனத்தின் எண் பதிவு செய்யப்படவில்லை. இதனால் இது திட்டமிட்டு செய்யப்பட்டு இருக்கலாமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



