Show all

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி சந்தித்து பேசி உள்ளார்

500, 1000 ரூபாய் நோட்டுகள் தடையினால் நெருக்கடி ஏற்பட்டு உள்ளநிலையில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி சந்தித்து பேசிஉள்ளார். செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மக்கள் வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி வருகிறார்கள். தொடக்கத்தில் ஒரு நபர் ரூ.4 ஆயிரம் வரை மாற்றிக்கொள்ளலாம் என்று இருந்தது, பின்னர் ரூ.4,500 ஆக அதிகரிக்கப்பட்டு, தற்போது ரூ.2 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. ஒருவரே பலமுறை ரூபாய் நோட்டுகளை மாற்றுவதாகக் கருதி;, விரலில் அடையாள மை வைக்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் முதலில் வந்த சிலருக்கு மட்டுமே பணம் கிடைக்கும் நிலையும் காணப்படுகிறது. சில வங்கிகள் வைப்பு மட்டும் பெறுகிறது ஏடிஎம்களில் பணம் போடவேயில்லை. ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் மக்களிடையே பெரும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த அறிவிப்புக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகள், இந்தப் பிரச்சினையைப் பாராளுமன்றத்தில் எழுப்பி அரசுக்கு எதிராக பெரும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பல உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. ரூபாய் நோட்டு பிரச்சினையில் பாராளுமன்றம் முடக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடந்தது. இந்தப் பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் அரசு கடைப்பிடிக்க வேண்டிய உத்தி குறித்து இதில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி சந்தித்து பேசிஉள்ளார். சந்திப்பானது சுமார் 45 நிமிடங்கள் நடந்து உள்ளது. சந்திப்பின் போது என்ன விவகாரம் குறித்து பேசப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடந்து ஏற்பட்டு உள்ள நிலையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் எடுத்துரைத்து இருக்க வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.