Show all

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு முழுநேர இயக்குநர் நியமனம்! 13 ஆண்டுகளாக காலியாகவே இருந்த பொறுப்பு; பெரிய கொண்டாட்டம் இல்லாமல்

நடுவண் அரசின் தன்னாட்சி நிறுவனமாக விளங்கும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கடந்த 13 ஆண்டுகளாக இயக்குநர் இடம் காலியாகவே இருந்த நிலையில் தற்போது பேராசிரியர். சந்திர சேகரன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முழுநேர இயக்குநராகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடுவண் அரசின் தன்னாட்சி நிறுவனமாக விளங்கும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கடந்த 13 ஆண்டுகளாக இயக்குநர் இடம் காலியாகவே இருந்தது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் சந்திர சேகரன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முழுநேர இயக்குநராகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோட்டில் மூலப்பாளையம் நேதாஜிநகரில் உள்ள வீட்டில் இருந்து பேட்டியளித்த திரு சந்திர சேகரன்:
தமிழக முதல்வர் தலைமையில் செயல்பட்டு வரும் அமைப்பிற்கு இயக்குநராக பொறுப்பு ஏற்றிருப்பது பெருமை அளிக்கக் கூடியதாக உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவேன்.
மேலும் தமிழ்மொழியில் தொய்வு ஏற்பட்டுள்ள ஆய்வுகளை மேம்படுத்துவதற்கு அதிக நிதிகளைப் பெற்றுத் தந்து தமிழ்ப்பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்த முயற்சி எடுப்பேன் என்று கூறினார்.
உலகம் முழுவதும் தமிழ்வழி கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்தி உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் வருங்காலத் தலைமுறையினருக்கு தமிழ்மொழியின் முதன்மைத்துவத்தை உணர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

பேராசிரியர் சந்திரசேகரன், தமிழ்ச்சங்கம், பழங்குடிகள், சங்ககால இலக்கியத்தில் தமிழ் மொழி என பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

மேலும் கடந்த ஆண்டு குடிஅரசுத் தலைவர் விருதுகளைப் பெற்றுள்ளதுடன், தேசிய மற்றும் மாநில அளவில் தமிழ் மொழியில் சிறந்து பணியாற்றியதற்காக விருதுகளைப் பெற்றுள்ளார். என்றும் தெரிவிக்கப்படுகிறது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அல்லது செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் என்பது தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இந்திய அரசின் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் கீழ் அமைக்கப்பட்ட மையமாகும். இந்திய அரசால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்பு, 2006 மார்ச்சு முதல் 2008 மே 18 வரை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் என்னும் பெயரில் செயற்பட்டுவந்தது. இந்நிறுவனம் 2008 மே 19 முதல் சென்னையில் இயங்கிவருகிறது. 

இந்த மையத்தின் வழியாக தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கி.பி. 600க்கு முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு பண்டைத்தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வை நிகழ்த்தும் வகையில் இது நிறுவப்பட்டது. பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் வெளிப்படுத்தும் வகையில் ஆவணப்படுத்துவதையும் பாதுகாப்பதையும் இந்நிறுவனம் தன் நோக்கமாகக் கொண்டுள்ளது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஜனவரி 21 2009 அன்று தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டம் உட்பிரிவு 10ன் கீழ் (1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 27) பதிவு செய்யப்பட்டது. ஆட்சிக்குழு, கல்விக்குழு, நிதிக்குழு, உயர்நிலைக்குழு, தலைவர், துணைத் தலைவர், செயலர், அலுவல்சார் உறுப்பினர்களைக் கொண்ட தன்னாட்சி நிறுவனமாகும்.

இலங்கையில் தமிழீழப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர  “உலகஅரசியல்” அணிதிரண்ட நேரம். நடுவண் காங்கிரஸ் அரசும் அவற்றோடு கைகோர்த்து இருந்தது. அந்த நேரத்தில் கூட்டணி கட்சியான திமுக அமைதி காத்தமைக்கான கைம்மாறகப் பெற்ற பரிசுதான் தமிழுக்கு செம்மொழித்தகுதி. மற்றும் இந்த செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம். அதனால் தமிழுக்கு வழங்கப்பட்டதான செம்மொழி தகுதி மீதும், இந்த நிறுவனத்தின் மீதும் உலகளாவிய தமிழர்களுக்கு பெரிய ஈடுபாடு இருந்திருக்கவில்லை. 

நான்காம் ஈழப்போர் என்பது இலங்கை அரசபடைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நான்காவது கட்டமாக நடைபெற்ற இறுதிப் போரைக் குறிக்கும். போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்த அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே, 2006-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 26-ஆம் நாள் ஒரு முரண்நிலை தோன்றி ஒரு விரோதப் போக்கு தோற்றுவிக்கப்பட்டது. கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு ஜனவரி 2, 2008 அன்று அறிவித்தது. இதன்படி தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அதிகாரப்பாடாக விலகுவதாகவும், அதற்கான 14 நாள் கால அவகாசத்தை வழங்குவதாகவும் இலங்கை அரசாங்கம், உடன்படிக்கையின் அனுசரணையாளரான நோர்வேயின் தூதரகத்திற்கு எழுத்து மூலம் ஜனவரி 3 ஆம் நாள் அறிவித்தது.

நான்கு ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டிருந்த யுத்த நிறுத்தத்தை முறித்துக் கொண்டு அரசப்படைகள், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டன. போரின் இறுதியான காலகட்டத்தில், வடகிழக்குப் பிரதேசத்தில் உள்ள நந்திக் கடலேரியைச் சூழ்ந்த பகுதியில் சண்டை மிக உக்கிரமாக நடந்தது. மூன்று இலட்சம் வரையான தமிழ்ப் பொதுமக்கள் போர் நடந்த இடத்தினுள்ளே முடக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து நடைபெற்ற போரினால் இலங்கைப் படை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து பகுதிகளையும் கைப்பற்றியது. இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கடைசிப் பிரதேசமும் வந்தடைந்த, 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள், போர் முடிவுக்கு வந்ததாகவும், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் மரணமடைந்துவிட்டதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்தது. இந்த இறுதிப் போரில் இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்கள் பல செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கால இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள், இலங்கைக்கு ஆயுத உதவி, மற்றும் ஆலோசனைகள், போர்ப்பயிற்சிகள் வழங்கிய நிலையில் அந்தக் குற்றச்சாட்டு எடுபடவில்லை.     

ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை பெப்ரவரி 2010 இல் கோவையில் நடத்த முதலில் தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இது குறித்த அறிவிப்பை முதல்வர் மு. கருணாநிதி சென்னை தலைமைச் செயலகத்தில் 2009 செப்டம்பர் 17 ஆம் நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்திருந்தார். இம்மாநாட்டை நடத்துவதற்குப் போதிய கால அவகாசம் இல்லை என உலகத் தமிழாராய்ச்சி மன்ற நிர்வாகக் குழுவின் இரு உறுப்பினர்கள் சம்மதிக்காததால் இந்த மாநாட்டுக்கு ஈடாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கலைஞர் கருணாநிதி அவர்களால் அறிவிக்கப்பட்டது.

திமுக தலைமை வகிக்கும் தமிழக அரசால் ஒருங்கிணைக்கப்படும் செம்மொழி மாநாட்டை அதிமுக, மதிமுக கட்சிகள் புறக்கணித்தன. “கருணாநிதியால் நடத்தப்பெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்பது, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் உலகத்தமிழ் மாநாடு வரிசையில் இடம் பெறாததால், இந்த மாநாட்டில் அதிமுக கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. எனவே திமுக அரசால் நடத்தப்படும் இந்த உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை அதிமுக புறக்கணிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று கூறினார் ஜெயலலிதா. அதே போல உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் மதிமுகவும் பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். மாநாடு கூட்டுவதில் அரசியல் நோக்கு யாதும் இல்லையென்றும், உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் பங்கேற்பு உண்டு என்றும் முதலமைச்சர் அறிக்கை விடுத்தார்.

ஈழத் தமிழர்கள் பெரும் அழிவைச் சந்தித்து, வதை முகாங்களில் இருக்க உலகத் தமிழாராய்ச்சி அல்லது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பொருத்தமானதா என்று கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் கேள்வி விடுத்தது. “பக்கத்து நாட்டில் ஒன்னரை இலட்சம் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட்ட போது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா" என்று மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி விமர்சித்தார்.

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களை அழைக்கவில்லை என்கிற செய்தி பல ஊடகங்களிலும், இணைய தளங்களிலும் விமர்சனத்துக்கு உள்ளாகியது.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை- ஹிந்தி மொழி வளர்ச்சி, ஹிந்தித் திணிப்பையே தமிழகத்திற்கு தொடர்ந்து வழங்கி வந்த- அந்தக் காலக்கட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்களஅரசுக்கு உதவி வந்த- காங்கிரஸ் அரசிடம் திமுக தமிழீழத்தை அடகு வைத்துப் பெற்றுத்தந்தமையால்- தமிழர் யாருக்கும் தமிழுக்கு நடுவண் காங்கிரஜ் அரசு வழங்கிய செம்மொழி தகுதியையும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தையும், அரிய பரிசிலாகக் கொண்டாட முடியவில்லை. 

இன்றைக்கும்  செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு- தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் சந்திர சேகரன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முழுநேர இயக்குநராகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதை இரஜினிகாந்த்துதான் பாராட்டிக் கொண்டிருக்கிறார். அதுவே, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு முழுநேர இயக்குநராகப் பணி நியமனம் குறித்த செய்தியாக வலம் வந்து கொண்டிருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.