ரிசர்வ் வங்கி
மறுத்ததால் 96 ஆயிரம் ரூபாய் பழைய தாள்களை மாற்றித்தரும்படி பெற்றோர்களை இழந்த சிறுவன்
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டம் சரவாடா அருகே
உள்ள ஆர்.கே. புரத்தில் ராசு, பஞ்சாரா என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு
16 அகவையில் (தற்போது) ஒரு மகனும், 12 அகவையில் (தற்போது) ஒரு மகளும் இருந்தனர். ராசு ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் இரு குழந்தைகளுடன்
பஞ்சாரா வாழ்ந்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு பஞ்சாரா கொலை செய்யப்பட்டார். அப்போது
அந்த பையனுக்கு 12 அகவையும், அந்த சிறுமிக்கு 8 அகவையும்; இருந்ததால் அவர்கள் ஆதரவற்றோர்
விடுதியில் தங்கியிருந்தனர். அவர்களிடம் நடத்திய கவுன்சிலிங்கின்போது, அவர்களின் தாயார்
வாழ்ந்து வந்த வீட்டின் முகவரியை கூறினார்கள். இதையடுத்து இந்த மாத தொடக்கத்தில் காவல்துறையினர்
விசாரணைக்காக அந்த வீட்டை திறந்து சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் பழைய 500
ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் ரூ96 ஆயிரத்தி 500ம், தங்க நகைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து குழந்தைகள் நலவாரிய குழுவுக்கு தெரியப்படுத்தப்பட்டது. பின்னர் அவர்கள் ரிசர்வ் வங்கியை அணுகி பழைய ரூபாய்
தாளகளை மாற்றித் தரும்படி கேட்டனர். ஆனால் ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்து விட்டது. இதனால் அந்தச் சிறுவன் தனது கைப்பட பிரதமருக்கு
ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், எனது அப்பா, அம்மா கூலித் தொழிலாளி. தந்தை
இறந்துவிட்டார். கடந்த 2013 ஆம் ஆண்டு என்னுடைய தாயாரும் கொலை செய்யப்பட்டார். எனது
தங்கை பெயரில் நிரந்தர வைப்புத் தொகையாக இந்தப் பணத்தை வைப்பு செய்ய இருக்கிறேன். ஆகையால்
எனது தாயார் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்துள்ள இந்த பழைய தாள்களை மாற்றுவதற்கு நடவடிக்கை
எடுங்கள் என்று எழுதியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



