Show all

சீமான் காட்டமான அறிக்கை! மோசமான முன்னெடுப்பு என்பதாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு. இரஞ்சன் கோகாய்க்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி


காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்,  ரஞ்சன் கோகாய் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக நியமிக்கபடுவது மோசமான முன்னுதாரணமாக அமையும் என கடுமையாக விமர்சித்து வெளிநடப்பு செய்தன.

06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உச்சஅறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவராக இருந்து நான்கு மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றவர் ரஞ்சன் கோகாய். இவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்,  ரஞ்சன் கோகாய் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக நியமிக்கபடுவது மோசமான முன்னுதாரணமாக அமையும் என கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

இந்த நிலையில்,  மாநிலங்களவை உறுப்பினராக முன்னாள் தலைமை அறங்கூற்றுவர் இன்று பதவியேற்றுக்கொண்டார். ரஞ்சன் கோகாய் பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

வரலாற்றுச் சிறப்பு மிக்க அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியவரான ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

முன்னாள் அறங்கூற்றுவர்களுக்கு ஓய்வுக்கு பின் பதவி. அறங்கூற்றுத்துறையின் நடுநிலைத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் செயல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பதவியிலிருந்து இறங்கியதும் ஆளும் அரசால் அறங்கூற்றுவர்களுக்கு வழங்கப்படும் ஆளுநர் பதவிகளும், மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளும் அவர்கள் அறங்கூற்றுவர்களாக இருந்த பொழுது வழங்கப்பட்ட தீர்ப்பைக் கேள்விக்குறியாக்குகிறது. ஓய்வுபெற்ற பின் இப்பதவிகளைப் பெறுவதற்காக அறங்கூற்றுவர்கள் இனி அரசின் ஊதுகுழலாக மாற இந்த நியமனம் முறைகேடான முன்னுதாரணமாக அமைந்துவிட்டது. இதன்மூலம் மக்களாட்சியின் அடித்தளமாக இருக்கிற அறங்கூற்றுத்துறையும் பாசிச பாஜக அரசால் தன்வயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பேராபத்தை உணர்ந்துகொள்ள வேண்டியதிருக்கிறது.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பெருங்கனவே எளியவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யும் மக்களாட்சித் தத்துவத்தைப் பேணிக் காப்பது தான்! அதனை முற்றிலும் சீர்குலைக்கும் விதமாக அறங்கூற்றுத்துறையின் மாண்பையும், சார்பற்ற தன்மையையும் அதளபாதாளத்தில் குழிதோண்டிப் புதைத்த இச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது என்று சீமான் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.