Show all

ஆட்சிக்கு சௌந்தர்யா- கட்சிக்கு இரஜினியாம்! கட்சி தொடங்குவது உறுதியாம்

சௌந்தர்யாவை முன்னிலைப்படுத்தினால் கொண்டாடிகளும் ஏற்றுக்கொள்ளுவார்கள், தன் மீது வைக்கப்படும் வெளிமாநிலத்தவர் என்கிற விமர்சனமும் அடிபடும் என்று கணக்குப் போட்டுவிட்டாராம் இரஜினி; அதனால் கட்சி தொடங்குவது உறுதியாம் இரஜினி.

06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சௌந்தர்யா ரஜினிகாந்த் அகவை 36. முதன்மையாக தமிழ்த்திரையில் பணியாற்றும் வரைகலை வடிவமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் ஆக்கர் பிக்சர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளரும் கூட. ஒரு வரைகலை வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய சௌந்தர்யா, அவரது தந்தை இரஜினிகாந்த் நடித்த படங்களில் தலைப்புக் காட்சிகளை வடிவமைக்கத் தொடங்கினார். அவர் கோவா திரைப்படத்தின் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க திரைப்பட தயாரிப்பாளராகவும் ஆனார். இரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தில் ஒரு இயக்குனராக அறிமுகமானார்.

இவரை முன்னிலைப்படுத்தினால் கொண்டாடிகளும் ஏற்றுக்கொள்ளுவார்கள், தன் மீது வைக்கப்படும் வெளிமாநிலத்தவர் என்கிற விமர்சனமும் அடிபடும் என்று கணக்குப் போட்டுவிட்டாராம் இரஜினி; அதனால் கட்சி தொடங்குவது உறுதியாம் இரஜினி.

என்னால் முதல்வர் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. நான் கட்சித் தலைவர்தான். ஆட்சித் தலைவர் இல்லை. அன்பு கொண்டவரை, பாசம் கொண்டவரை, நிர்வாகத் திறமை உடையவரையே முதல்வர் ஆக்குவேன் என்று சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடியாக அறிவித்திருந்தார் அல்லவா நடிகர் இரஜினிகாந்த்.

தனக்கு பதவி மேல் ஆசை இல்லை எனவும், நிர்வாகத் திறமை உள்ள ஒருவரை முதல்வராக்கி அவரது செயல்பாடுகளைக் கண்காணிக்கும் கட்சித் தலைவராக மட்டுமே தான் இருப்பேன் என்றும் அறிவித்துள்ளார். இதற்கான அரசியல் எழுச்சி தமிழகத்தில் உருவாகும் என்றும் சொல்லியிருந்தார். அந்த அரசியல் எழுச்சியை உருவாக்க களம் இறக்கப்பட்டிருக்கிறாராம் சௌந்தர்யா.

இந்த நிலையில், இரஜினியின் அரசியல் வருகை கண்டிப்பாக இருக்கும். அவரது திட்டத்துக்குப் பின்னால் அவரது இரத்தபந்தமே இருக்கப்போகிறது என்ற தகவல் கசியத் தொடங்கியுள்ளது. 

இந்திய அளவில் பாஜக என்ற ஒரு கட்சி தொடங்குவதற்கு முன்பே அதற்காக தமிழகத்தில் விதையில்லாமலே நீர் ஊற்றி வந்தவர்தான் நடிகர், இதழியலாளர் சோ. அவர் உயிரோடு இருந்தபோது தமது கனவுக்கு இரஜினி நல்ல விதையாக இருப்பார் என்று கணித்திருப்பார் போலும். அவர் அப்போதே இரஜினியிடம் கட்சி தொடங்க வலியுறுத்தியிருந்திருக்கிறார். ஆனால், நீங்கள் முதல்வராக இருந்தால் கட்சி தொடங்க நான் தயார் என்று சொல்லி அவரையே அதிரவைத்தவர் தான் இந்த இரஜினி. 

இப்போதும் அந்த முடிவில் உறுதியாக இருக்கிறார். முதல்வர் பதவி மீது அவருக்கு விருப்பம் இல்லையென்றாலும்- சோவின் நட்பு, லதா மனைவியாகக் கிடைத்தது, ஆன்மீக நாட்டம் எல்லாமாக அவருக்கு  தமிழகத்தில் ஒரு கட்சியை நிலையூன்றச் செய்ய வேண்டும் என்கிற விருப்பம் அவர் மனதில் இருந்து கொண்டேயிருந்திருக்கிறது. 

அதற்காகவே அவர் பலரிடம் ஆலோசனையும் கேட்டுவந்தார். இளைஞர் ஒருவரையே பதவிக்கு கொண்டுவர வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருக்கிறது. அந்த விருப்பத்தை அவருடைய வாரிசுகள் நிறைவேற்ற களம் அமைக்கப்பட்டு வருகிறது என்பது புதிய செய்தி என்கிறார்கள்.

இரஜினிக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்கிற இரண்டு மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா, நடிகர் தனுசைத் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தைக் கவனித்துகொண்டுவருகிறார். இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கு முதல் திருமணம் நடந்து அது மணமுறிவு ஆனது. அதற்குப் பிறகு பேரறிமுக தொழில் அதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். விசாகன் தற்போது மருந்து நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்திவரும் தொழில் அதிபராக இருக்கிறார். சௌந்தர்யா ஏற்கெனவே திரைத்துறையிலும் கால்பதித்து இருக்கிறார். 

இங்கே இரஜினியின் அரசியல் தலைமையாக குறிப்பிடத் தகுந்தவர் சௌந்தர்யா. அரசியல் மீது அவருக்கு ஆர்வம் அதிகம் என்பதை இரஜினியும் அறிந்துவைத்துள்ளார்.

இப்போது இரஜினிக்குத் துணையாக பல பணிகளில் ஈடுபட்டு வருகிறார் சௌந்தர்யா. இரஜினி இமயமலை செல்லும்போது அவருடன் சென்றார் சௌந்தர்யா. மேலும், இரஜினி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் பங்கெடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதைத்தவிர ரஜினியின் அரசியல் வருகைக்கும் பல உதவிகளைச் செய்துவருகிறார் என்கிறார்கள்.

தற்போது இரஜினியின் கீச்சுக் கணக்கைப் பார்த்துக்கொள்வது சௌந்தர்யாதான். அதேபோல் இரஜினிக்கு வரும்காலத்தில் சமூகவலைதளங்களில் ஆதரவு வட்டத்தை உருவாக்கும் வேலையிலும் இறங்கியிருக்கிறார். சௌந்தர்யாவுக்குத் தனியாக அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தில் இப்போது இரஜினியின் சமூகவலைதளங்களைப் பார்த்துக்கொள்ள ஆட்களை நியமித்துள்ளார். 

சில நாட்களாக இரஜினி மன்றத்தின் சார்பில் சமூகவலைதளங்களில், “இப்போ இல்லைன்னா.. எப்பவும் இல்லை” என்கிற முழக்கம் இரஜினியின் படத்துடன் பரப்பப்பட்டு வருகிறது. இதற்குப் பின்னால் இருப்பது சௌந்தர்யா என்கிறார்கள். சௌந்தர்யாவின் இந்த எண்ணத்துக்கு அவரின் கணவர் விசாகன் தரப்பிலும் பச்சைக் கொடி காட்டப்பட்டுவிட்டது என்கிறார்கள். 

அப்பா கட்சியை மட்டும் தொடங்கினால் போதும். அதன் பிறகு முழுநேரமும் அதை நான் பார்த்துக்கொள்ளுவேன் என்றும் சொல்லி வருகிறாராம் சௌந்தர்யா. இதற்கு இரஜினியும் பச்சைக் கொடிகாட்டிவிட்டார் என்கிறார்கள். 

அடுத்த சில நாட்;களில் அப்பாவுக்கு ஆதரவாக அவர் சமூகவலைதளங்களில் தொடங்கப் போகும் கருத்துப் பரப்புதலே அதற்குச் சாட்சியாக அமையும் என்கிறார்கள். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.