06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் சரோவர் அணையின் புனரமைப்பு அமைப்பின் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரமேஷ்சந்திரா பெபர். அரசு அதிகாரியான இவர், கடந்த சில மாதங்களாக அலுவலகத்திற்கு வருவதில்லை. இதனால், அவரிடம் விளக்கம் கேட்டு கவனஅறிக்கை கொடுக்கப்பட்டது. அதற்கு பெபர் அளித்துள்ள பதில்: கடவுள் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக கருதப்படும் கல்கி அவதாரம் நான்தான். வீட்டில் இருந்து தவம் செய்து வருகிறேன். என் தவத்தின் பயனாக சில ஆண்டுகளாக நாட்டில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் அலுவலகத்தில் இருக்கும் போதுதான் நான் கல்கி அவதாரம் என்பதை உணர்ந்தேன். அப்போதிலிருந்து எனக்கு தெய்வ சக்திகள் கிடைத்து வந்தன. நான் கடவுள் அவதாரம் என்பதால் வேலைக்கு வரவேண்டிய தேவை எனக்கு இல்லை. என்னால் அலுவலகத்தில் அமர்ந்து தவம் செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார். ஆரியர்கள் நாடோடிகளாக நாவலந்தேயத்தின் (குமரியிலிருந்து இமயம் வரையிலான நிலப்பகுதி) வட பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ஆறுகளின் கரையோரம் மட்டுமே ஆடு, மாடுகளை மேய்த்து நாடோடிகளாகப் பயணித்துக் கொண்டிருந்த ஆரியர்களுக்கு ஓர் அதிசயம் நாவலந்தேயத்தில் காத்திருந்தது. அதுதான் நாவலந்தேயம் வாழ்மக்கள், உழவுக்காக அணைகட்டி ஆற்றை தேக்கியிருந்த பாங்கு. அதை பார்த்ததும் ஆரியர்களுக்கு கடுமையான கோபம் வந்தது. மாட்டைப் பட்டியில் அடைத்து வைப்பதைப் போல நீரை ஆடு, மாடுகளுக்கு பயன்படாமல் அடைத்து வைத்திருக்கிறார்களே என்று புலம்பியதை, ஆரியர்கள் தங்கள் ரிக் வேதத்தில் பதிவு செய்து வைத்திருக்கிற சூத்திரங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆரியர்கள் நாள் தொடக்கம் பகல் 12மணி. பகல் 12மணிக்குதாம் தூக்கத்தில் இருந்து விழிப்பார்கள். இரவு 12மணி வரை தங்களுக்கும் ஆடு மாடுகளுக்கும் உணவு தேடுவார்கள்; சமைப்பார்கள்; சாப்பிடுவார்கள்; போதுமான உணவு கிடைக்காத போது ஆடுமாடுகளை அடித்துச் சாப்பிடுவார்கள். இரவானதும் ஆடுமாடுகளை பட்டிகளில் அடைத்து விட்டு, நெருப்பு மூட்டி ஆண்பெண் ஆடிப்பாடி மகிழ்வார்கள். சோமபானம் சுராபானம் அருந்தி கொட்டமடிப்பார்கள். நாவலந்தேயத்தில் அந்த மாதிரியான அன்றாடக் கடமைகளை யெல்லாம் முடித்து விட்டு அணைகளை இடிக்கும் வேலைகளைச் செய்தார்கள். பாபர் மசூதியை கரசேவை செய்து இடித்தார்களே அந்த மாதிரிதான். உண்மையிலேயே நாவலந்தேய மக்கள் இவர்களிடம் பயந்துதான் போனார்கள். அச்சத்தோடு நாவலந்தேய மக்கள் ஆரியர்களை பவ்வியமாக அணுகிய போது, தங்களை, ஆற்றல் மிக்கவர்களாக காட்டிக் கொள்ள ஏராளமான கட்டுக் கதைகளை எல்லாம் சொல்லத் தொடங்கினார்கள். அப்புறம் அதுவே அவர்களுக்கு தொழிலாகிப் போனது. வேதங்கள், இராமயணம், மகாபாரதம் எல்லாம் கட்டமைக்க வேண்டிதாகியது. தொடர்ச்சி அறுபட்டு விடாமல் நிறையக் கட்டுக் கதைகளை கட்டினார்கள். இன்று வரை ஆரியர்கள் அதையே செய்து கொண்டிருக்கிறார்கள். நாமும் வஞ்சனையில்லாமல், கணினி வரை ஏராளாமான உற்பத்திகளை செய்தபோதும் அவர்கள் கட்டுக்கதைகளிலிருந்து விடுபடாமல், தொலைக்காட்சி புராணத் தொடர்களாகவும் இரசித்து, இரண்டாயிரம் ஆண்டுகால கதைகட்டிகளுக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறோம். இவருக்கும் சோறு போடுவோம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,793.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



