06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நெல்லை மாவட்டம், கடையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கடாநா ஆற்றில் கலக்கும் ராமஆற்றின் குறுக்கே இந்த அணை அமைந்துள்ளது. இந்த அணை 96 ஏக்கர் பரப்பளவில் 84 அடி கொள்ளளவுடன் 152 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமிக்கும் திறன் கொண்டது. இந்த அணை மூலம் கடையம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்கடையம், மேலக்கடையம், தெற்குக்கடையம், ரவணசமுத்திரம், பொட்டல்புதூர், கோவிந்தப்பேரி, மந்தியூர், ராஜாங்கபுரம், பிள்ளையார்குளம், மீனாட்சிபுரம், வீராசமுத்திரம், வாகைக்குளம் , பாப்பான்குளம் ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட 4943.51 ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சுமார் ஒரு லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போதும், கடந்த ஆண்டு ஓகி புயலின் போது கொட்டித் தீர்த்த மழையிலும் பாறாங்கற்கள், மரங்கள், மணல் அடித்து வரப்பட்டு அணையில் சேர்ந்தது. இதனால் அணையில் சுமார் 27 அடி வரை மணல், பாறாங்கற்கள், மரம் ஆகியவை நிரம்பி உள்ளன. தற்போது 27 அடிக்கு மேல்தான் நீர்தேக்கி வைக்கும் நிலை காணப்படுவதால், அணை முழு கொள்ளளவுக்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் சம்புஆறு மேல்மட்டக் கால்வாய் அமைந்தால் கடையம் அணைப் பாசன உழவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே அணையை முழுமையாக தூர்வாரிய பிறகே மேல்மட்டக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென அணை பாசன உழவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கடையம் ஒன்றிய மதிமுக செயலர் மதியழகன் கூறியதாவது: கடையம் பகுதியின் வற்றாத ஆறாக ராமஆறு உள்ளது. இதை நம்பி மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேளாண் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அணையின் வடகால் மூலம் 8 குளங்களும், தென்கால் மூலம் 13 குளங்களும், பாப்பான்கால் மூலம் 12 குளங்களும் நீரைப் பெற்று உழவுக்குப் பயன்படுத்தப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அணையில் முழு கொள்ளளவு நீர் சேமிக்க முடியவில்லை. இதனால் மழை குறைந்த காலங்களில் உழவு செய்ய முடியாத நிலை உள்ளது. தற்போதுள்ள நிலையில் சம்புஆறு மேல் மட்டக்கால்வாய் திட்டம் நிறைவேற்றப் படுமானால் அணை பாசன உழவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். அணையை முழுமையாக தூர்வாரி அணையில் முழு கொள்ளளவு நீரை சேமிக்கும் வசதியை ஏற்படுத்தினால்தான், சம்புஆற்று மேல்மட்டக் கால்வாயின் குறிக்கோளும் முழுமையாகும். அணையைத் தூர்வாருவதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியுள்ளோம். ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. நெல்லையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அணை தூர்வாரப்படும் என தமிழக முதல்வர் கூறினார். ஆனால் தூர்வார எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு இதில் முழுக்கவனம் செலுத்தி அணையை தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அனைத்து கட்சிகள் சார்பில் கடையம் வட்டார உழவர்களதை; திரட்டி போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,793.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



