Show all

ரபேல் ஆவணங்கள் திருடு போய்விட்டனவாம்! நடுவண் அரசு தரப்பு வழக்கறிஞர், அறங்கூற்றுமன்றத்திற்கு தெரிவிக்கிற பதில். என்னே கொடுமை

22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உச்ச அறங்கூற்றுமன்றத்தில் ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான மறுசீராய்வு வழக்கின் விசாரணை இன்று உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் அணியமானார். மறுசீராய்வு வழக்கைத் தொடர்ந்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், கடந்த ஆண்டு ரபேல் விவகாரத்தில் அளித்த தீர்ப்பில் மிகப்பெரிய பிழைகள் இருப்பதாகவும், பாஜக தலைமையிலான அரசு அறங்கூற்றுமன்றத்தை ஏமாற்றுவதாகவும் குற்றம்சாட்டினார்.

பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து ரபேல் ஒப்பந்தம் குறித்த சில முதன்மை ஆவணங்கள் முன்னாள் அல்லது இந்நாள் ஊழியர்களால் திருடப்பட்டுள்ளது என்றும் வேணுகோபால் கூறினார். அப்போது குறுக்கிட்ட அறங்கூற்றுவர் ஆவணங்கள் திருடு போயுள்ளது என்றால் அதுதொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என கேள்வியெழுப்பினார்.

இந்து என்.ராம் அளித்த கடிதத்தின் ஆவணங்கள் புதிதாக சமர்ப்பிக்கப்பட்டதை அறங்கூற்றுமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இந்த கட்டத்தில் புதிய ஆவணங்கள் எதையும் பார்க்கப் போவதில்லை எனவும் அறங்கூற்றுவர்கள் கூறிவிட்டனர். 

இதையடுத்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் வேணுகோபால் வாதிடுகையில் தி இந்து ஊடகம் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். 

இதுபோன்ற முதன்மை ஆவணங்களை வெளியிடுவது ஏற்புடையதல்ல. இந்த ஆவணங்களை ஒருவர் வைத்திருப்பதே கமுக்கப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும். இதற்காக அரசாங்கம் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளது என்றார்.

ஆவணங்கள் வெளியானது எப்படி என்பது தொடர்பாக அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது. கமுக்க ஆவணங்களை வைத்து வழக்காடுவது குற்றத்துக்குரிய ஒன்றாகும். எனவே இந்த மறு சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வேணுகோபால் கோரிக்கை வைத்தார். ஆனால் திருடப்பட்டதாக இருந்தாலும் அதை ஆவணமாகக் கருதலாம் என்று அறங்கூற்றுவர் ஜோசப் கூறினார்.

மேலும் தி இந்து மற்றும் ஏ.என்.ஐ. ஊடகங்கள் வெளியிட்ட ஆவணங்கள் திருடப்பட்ட ஆவணங்கள் என்றால், ஆவணங்கள் திருடு போனது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகளை நாளைக்குள் பதிகை செய்ய வேண்டுமெனவும் அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர். இதையடுத்து மனுதாரர்கள் பிரஷாந்த் பூஷன் மற்றும் அருண் ஷோரி ஆகியோர் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

அதனைக்கேட்ட அறங்கூற்றுவர்கள் வழக்கை அடுத்த வியாழக் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,083.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.