Show all

ஆயிரக்கணக்கான பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கி கொண்ட தொடர்வண்டி! மும்பையில் கனமழை.

மகாராஷ்டிராவில் கடந்த மாத இறுதியில் தீவிரம் அடைந்த பருவமழை 5 நாட்கள் கொட்டி தீர்த்தது. இந்த மழைக்கு 31 பேர் பலியானார்கள். அதன்பின்னர் இயல்புநிலை திரும்பியிருந்த நிலையில், மும்பை மற்றும் புறநகரில் மீண்டும், நாள் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் மும்பை நகரின் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. 2000 பயணிகளை ஏற்றி சென்ற தொடர்வண்டி பாதி வழியில் பழுதாகி வெள்ளத்திற்குள் சிக்கியுள்ளது.

11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மும்பை மற்றும் புறநகரில், மீண்டும் நாள் முழுவதும் பெய்த கன மழையால் நகரின் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. கொட்டி தீர்த்த கனமழையால் தொடர்வண்டி மற்றும் சாலை போக்குவரத்து பாதிப்படைந்தன. ஒரு மணி நேரத்தில் 10 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் கோரேகான், அந்தேரி, பாந்த்ரா, சயான், மாடுங்கா போன்ற பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.

வடாலா, தாதர், குர்லா, செம்பூர், நவிமும்பை உள்ளிட்ட இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. சயான்-பான்வெல் சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இந்தக் கன மழையால் இருப்புப் பாதை தண்டவாளங்களிலும் தண்ணீர் சூழ்ந்தது. பட்லாப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் அந்த தடத்தில் தொடர்வண்டிகள் நிறுத்தப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும்; இந்தக் கடுமையான மழை காரணமாக, 2000 பயணிகளை ஏற்றி சென்ற தொடர்வண்டி பாதி வழியில் பழுதாகி வெள்ளத்திற்குள் சிக்கியுள்ளது. மும்பை-கோலாப்பூர் மகாலட்சுமி விரைவு வண்டி மும்பையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வான்கனி மற்றும் பத்லாப்பூர் இடையே நிற்கிறது.  இந்த தொடர்வண்டியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளே சிக்கியுள்ளனர்.  இந்நிலையில் தொடர்வண்டி சிக்கியுள்ள பகுதிக்கு தொடர்வண்டி பாதுகாப்பு படை மற்றும் நகர காவல்துறையினர் விரைந்துள்ளனர். 3 படகுகளில் பேரிடர் மீட்பு படையினரும் அந்த இடம் நோக்கி விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், பால்கர், தானே, மும்பை, ரெய்காட், ரத்தினகிரி மற்றும் சிந்துதுர்க் ஆகிய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழையோ அல்லது மிக கனமழையோ பெய்ய கூடும் என்று எச்சரிக்கை மும்பை மக்களிடையே பீதியைக் கிளப்பி வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,226.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.