புதுக்கோட்டையில் நடைபெற்ற மொய்விருந்து திருவிழாவில், உழவர் ஒருவர் நடத்திய மொய் விருந்தில் அந்த உழவருக்கு ரூ.4 கோடி மொய்ப்பணம் வசூலாகியுள்ளது. 11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மொய்விருந்து தமிழர்தம் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகும். தமிழகம் முழுவதும் பல்வேறு காலக் கட்டங்களில் பல விதமாக முன்னெடுக்கப் பட்டு வருகிறது. திருமணம், காதணி விழா, புதுமனைப் புகு விழா என்று தனிமனிதன் மற்றும் குடும்பம் சார்ந்த விழாக்கள் அனைத்திலும், தமிழ்ச் சமூகத்தின் சிறு ஒத்துழைப்பாக இந்த மொய்விருந்து முன்னெடுக்கப் பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டம் பேராவூரணி புதுக்கோட்டை மாவட்டத்தின் கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு, ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மொய்விருந்து என்பதே ஒரு விழாவாக முன்னெடுக்கப் பட்டு வருகிறது. 20,000 பேர் வரையிலும் மொய்விருந்து கணக்கு வைத்துள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருவர் மொய்விருந்து விழா நடத்துகிறார். தற்போது, இங்குள்ள பகுதிகளில் ஆடி முதலாம் நாளிலிருந்து மொய் விருந்து திருவிழா தொடங்கி, தற்போது களைகட்டத் தொடங்கியுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கி, சிரமப்படுவார்களுக்கு சிறு உதவியாகத் தொடங்கப்பட்ட இந்த மொய் விருந்து- இன்று பேருதவியாக கோடிக் கணக்கில் பணம் திரளும் திருவிழாவாக உருவெடுத்துவிட்டது. பணம் எண்ணுவதற்கு இயந்திரம், பந்தலைச் சுற்றி கண்காணிப்புக் படப்பிடிப்புக் கருவிகள், மொய் எழுதும் இடங்களில் வங்கி சேவை மையம், தனியார் பாதுகாப்பு காவலர்கள் எனக் கடந்த சில ஆண்;டுகளாகவே மொய்விருந்து விழா முற்றிலும் எண்ணிம மயமாகி வருகிறது. அதே போல மறுபுறம் மொய் விருந்து திருவிழாவில் கலந்துகொள்பவர்களுக்கு கம கம கறி விருந்தும் சிறப்படைந்து வருகிறது. இந்தப் பகுதி மக்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த வடகாட்டைச் சேர்ந்த உழவர் கிருஷ்ணமூர்த்தியின் மொய் விருந்து விழா முந்தாநாள் நடைபெற்றது. முன்னதாக 50,000 அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விநியோகித்து இருந்தார். ஒரே நேரத்தில் 1,000 பேர் வரையிலும் அமர்ந்து சாப்பிடும் வகையில் வடகாட்டில் பந்தல் அமைக்கப்பட்டுக் கண்காணிப்பு படபிடிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. 20 இடங்களில் மொய் எழுதுவதற்காகப் பணியாளர்கள் அமர்த்தப்பட்டு இருந்தனர். தனியார் வங்கி தனது சேவை மையத்தை அமைத்து இருந்தது. 10-க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாப்பு காவலர்கள் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். சுமார் 1,000 கிலோ ஆட்டுக்கறி சமைக்கப்பட்டு ஆயத்த நிலையில் இருந்தது. 100 பணியாளர்கள் மொய் விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு அசைவ விருந்து பரிமாறினர். சுமார் 8,000-க்கும் மேற்பட்டோர் விருந்தில் கலந்துகொண்டு சாப்பிட்டுவிட்டு மொய்ப் பணத்தை எழுதிவிட்டுச் சென்றனர். முடிவில் வசூலான மொய்ப்பணம் எண்ணப்பட்டது. இதில், உழவர் கிருஷ்ண மூர்த்திக்கு ரூ.4 கோடி மொய்ப்பணம் வசூலானது. இந்த ஆண்டில் தனி ஒருவருக்குக் கிடைத்த அதிகபட்ச மொய் வசூல் என்று பாராட்டப் பட்டு வருகிறது. இந்த நான்கு கோடி என்பது: கடந்த ஐந்து ஆண்டுகளாக பலருக்கும் இவர் வைத்த மொய்யும், இனி வரும் ஐந்து ஆண்டுகளில் இவர் அடைக்க வேண்டிய மொய்யுமாகும். இந்த தொகைக்கு வட்டியெல்லாம் இல்லை. ஆனால் அவருக்கு கிடைத்த கடனுதவிக்கு, ஒரு சேவைத் தொகையாக அவர் விருந்து செலவிடும் தொகை அமையும். இது பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் சமுதாயத்தில் உலாவரும் கடனுதவி ஒத்துழைப்பு நிருவாகம் ஆகும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,226.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.