Show all

வருமான வரி சோதனை நடத்தப்பட்டது! மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகரன் தொடர்புடைய இடங்களில்

சந்திரசேகருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். அந்தச் சோதனையின் போது 11 கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

06,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகரன் தொடர்புடைய இடங்களில் திடீரென்று வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அந்தச் சோதனையின் போது 11 கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகரன் பல்வேறு மாநில அரசுகளுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள், சிப்பங்கள், குழந்தைகள் நல உபகரணங்கள் உள்ளிட்டவற்றை கொண்டுதருதல் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. 

சந்திரசேகருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். வருமான வரி சோதனைகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று நேரடி வரிகளுக்கான ஒன்றிய வாரியத்தின் ஆணையர் சுரபி அலுவாலியா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும் அவற்றை கண்காணிப்பதற்கும் வருமானவரித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

சென்னையில் மொத்தம் எட்டு இடங்களில் ஒரு நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினோம். இந்த நிறுவனம் கொரோனா பாதுகாப்பு முழு உடல் கவசங்கள், பைகள், குழந்தைகள் நல உபகரணங்கள் உள்ளிட்டவற்றை பல்வேறு மாநில அரசுகளுக்கு கொண்டுதருதல் தொழில் செய்து வரும் ஒரு நிறுவனமாகும். 

இந்த சோதனையின்போது அதிகப்படியான வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கில் வராத பணத்தை பயன்படுத்தி நிலம் வாங்குவது, தொழிலை விரிவாக்கம் செய்வது போன்றவற்றில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். 

கணக்கில் வராத 11 கோடியே 50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளோம். மொத்தம் 80 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்து உள்ளது அந்த நிறுவனம். எனவே இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்வதன் மூலமாக, தேர்தலுக்கு அவற்றை பயன்படுத்துவது தடுக்கப்படும். தமிழகத்தில் நியாயமான தேர்தல் நடைபெறுவதற்கு இது உதவிகரமாக இருக்கும். வருமான வரித்துறையினர் தமிழகத்தில் நடக்கும் பண பரிவர்த்தனை தொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு சுரபி அலுவாலியா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக கருத்துப்பரப்புதல் செய்து வருகிறார் கமல்ஹாசன். அவரது கட்சியை சேர்ந்த ஒருவர், அதுவும் பொறுப்பில் உள்ளவர் மீது வருமான வரித்துறை சோதனை முன்னெடுத்திருப்பது குறித்து பலவாறாக கருத்து பகிரப்பட்டு வருகிறது. பாஜக கூட்டணி கட்சிகளில் இருப்பவர்கள் இடம் இருந்து, தேர்தல் நேரத்தில் கணக்கில் வராத பணம் எதுவும் பறிமுதல் செய்வதற்கு துப்பு ஏதும் கிடைக்கவில்லையா என்று கேள்வி எழுப்பியும் கருத்து பகிரப்பட்டு வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.