ஒரு குடிகாரத் தந்தைக்கு மகனாய் இருக்கும் சிரமத்தை, இந்திய மக்கள் அன்றாடம் அனுபவித்து வருகிறோம் ஒன்றிய பாஜக ஆட்சியில். அறிவு மழுங்கிய குடிகாரத் தந்தை போல், அதிகார- ஆதிக்கவாத போதையில், நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக புதிய புதிய சட்டங்களால் மக்களை அலைகழித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. 06,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: குடும்ப அட்டை மாதிரி மக்களுக்குப் பயன்தந்து கொண்டிருக்கிற அனைத்து அடையாளங்களையும், ஒன்றிய அரசின் மக்கள் மீதான அதிகாரப்பாட்டிற்கான ஆதாரில் இணைத்து, இந்திய மக்களை அடிமையாக்கத் தொடங்கியது ஒன்றிய பாஜக அரசு. மாநிலங்களின் கல்வி உடைமைகளைப் பிடுங்க நீட் மாதிரி நுழைவுத் தேர்வுகள். பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளை விடவும், விற்பனையில் கொள்ளை இலாபம் பார்க்க பெட்ரோல் விலை தீர்மானிப்பை தனியாருக்குத் தாரை வார்த்தது. மாநில உற்பத்திகளுக்கு மாநிலங்களில் வரி, அடுத்த மாநிலத்திற்குப் போகும் போது மட்டும் ஒன்றியத்தின் வரி என்ற நிலையை மாற்றி, அனைத்துக்கும் ஒன்றியத்தின் வரியாக்கிய சரக்கு-சேவைவரி, மிக மிகக் கூடுதலான சாலை போக்குவரத்து அபராதங்கள், கூடுதலாகிக் கொண்டே இருக்கும் சுங்கச்சாவடி வரிகள் இப்படி பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் உங்களின் அனைத்து விதமான வாகனங்களுக்கும் பதினைந்து அகவை முடிந்திருந்தால், அந்த வாகனச்சான்றுகளைப் புதுப்பிக்க அள்ளிக் கொட்டிக் கொடுக்க வேண்டிய அபாயத்தில் இந்திய மக்களை தள்ளியிருக்கிறது தற்போது ஒன்றிய பாஜக அரசு. ஒன்றிய பாஜக அரசு நடப்பு நிதியாண்டுக்கான செலவுத்திட்ட அறிக்கையில் வாகனக் குப்பைத் திட்டத்தை அறிவித்த நாள் முதல் பழைய வாகனங்களை வைத்துள்ளவர்களுக்குப் பயத்தை உருவாக்கியுள்ளது. நடப்பாண்டு செலவுத் திட்ட அறிவிப்பைத் தொடர்ந்து ஒன்றிய பாஜக அரசு தனது வாகனக் குப்பைத் திட்டத்தின் மூலம் 15 ஆண்டுகளுக்கும் பழைய வாகனங்களை வைத்துள்ளவர்களுக்கான சான்று புதிப்பிப்புக் கட்டணத்தை, 21 மடங்கு அதிகம் செலுத்த வேண்டிய நிலையில் மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இந்தியா பெருமளவிலான தொகையைக் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஒவ்வொரு ஆண்டும் செலவு செய்து வருவதாகக் குறிப்பிட்டே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இறக்குமதி எண்ணெய் வணிகத்தில், உற்பத்தி நாடுகளைவிடவும் இறக்குமதி மூலம் பலமடங்கு வரிஇலாபம் பார்க்கிறது இந்தியா. பழைய கார்களின் பயன்பாட்டைக் குறைப்பது மூலம் நாட்டில் ஆட்டோமொபைல் துறையின் ஈடுபட்டிருக்கிற கார்ப்பரேட்டுகளின் வர்த்தகத்தை மேம்படுத்துவதே ஒன்றிய பாஜக அரசின் நோக்கமாக இருக்க முடியும். பதினைந்து ஆண்டு பழைய வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் என்று தெரிவித்து, ஒன்றிய பாஜக அரசு இந்த வாகனங்களுக்கான பதிவு புதிப்பிப்புக் கட்டணத் தொகையைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. இதனால் பழைய வாகனங்களை வைத்துள்ளவர்கள் தொடர்ந்து வாகனத்தைப் பயன்படுத்த அதிகப்படியான தொகையைச் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. எடுத்துக்காட்டாக 15 ஆண்டு பழைய காருக்கு பதிவு புதிப்பிப்புக் கட்டணத் தொகையாக 5000 ரூபாய், இது தற்போதைய அளவை விடவும் 8 மடங்கு அதிகம். இதேபோல் 15 ஆண்டு பழைய இரு சக்கர வாகனங்களுக்கு 1000 ரூபாய் தற்போது இதன் கட்டணம் 300 ரூபாய். இதேபோல் 15 ஆண்டு பழைய பஸ், டிரக், லாரி மற்றும் இதர கனரக வாகனங்களைத் தொடர்ந்து பயன்படுத்த அடிப்படைத் தேவையாக இருக்கும் தரத்தகுதி புதிப்பிக்கப்பட்டதற்கான சான்றிதழ் பெற 12,500 ரூபாய் செலுத்த வேண்டும். இது தற்போதைய கட்டண அளவை விடவும் 21 மடங்கு அதிகமாகும். பதிவு புதிப்பிப்பு செய்யாமல் ஏமாற்றலாம் எனத் திட்டமிடுவோரையும் வளையத்திற்குள் கொண்டு வர, தனியார் வாகனங்கள் பதிவு புதிப்பிப்பு செய்யத் தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கும் 300 ரூபாயில் இருந்து 500 ரூபாயும், வர்த்தக வாகனங்களுக்கு நாள் ஒன்றுக்கு 50 ரூபாயும் அபராதம் விதிக்க ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் தனியார் வாகனங்கள் 15ஆண்டு பயன்பாட்டு பின்பு ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒரு முறை பதிவு புதிப்பிப்பு செய்ய வேண்டும், இதேபோல் வர்த்தக வாகனங்கள் 8 ஆண்டுகளுக்குப் பின் ஒவ்வொரு ஆண்டும் பதிவு புதிப்பிப்பு செய்ய வேண்டும் என்பது கட்டாயம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.