வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் காட்டுமிராண்டிகளை ஒடுக்க எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்று, பத்தாம் வகுப்பு பருவத்தேர்வில் கேள்வி கேட்டு, எல்லையில் போராடும் உழவர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறது ஒன்றிய இடைநிலை வாரியக் கல்விமுறைப் பள்ளி. 09,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு, இந்திய உழவர்களைக் குறிப்பிட்ட கார்ப்ரேட்டுகளுக்குக் கொத்தடிமைகள் ஆக்கும் வகைக்கான மூன்று வேளாண் சட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. அந்தச் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் உழவர்கள் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக வெயில், மழை பாராது போராடி கொண்டிருக்கும் சூழலில், ஒன்றிய இடைநிலைக் கல்விமுறைப் பள்ளி வினாத்தாளில் உழவர்கள் போராட்டத்தை காட்டுமிராண்டித்தனம் என சுட்டிக்காட்டி கேள்வி கேட்டிருக்கும் அசிங்கம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் காட்டுமிராண்டிகளை ஒடுக்க எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்று பத்தாம் வகுப்பு தேர்வில் கேள்வி கேட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது. சென்னையில் டி.ஏ.வி. எனும் ஒன்றிய இடைநிலை வாரியக் கல்விமுறைப் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பருவத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதில் ஆங்கிலத் தேர்வு வினாத்தாளில் ஐந்து மதிப்பெண் கேள்வியில், டெல்லியில் போராடும் உழவர்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதில் டெல்லியில் நடைபெற்ற உழவர்கள் போராட்டத்தில் ஒன்றியக் கொடி அவமதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நாட்டின் நலனை முதன்மையாகக் கொள்ளாமல், தனிநபர் விருப்பத்தின் பேரில் போராட்டம் நடைபெற்றதாகவும் வினாத்தாளில் அச்சிடப்பட்டிருந்தது. டெல்லியில் போராடும், உழவர்கள் காட்டு மிராண்டிகள் என்றும் அவர்களை ஒடுக்க எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் எனவும் கேட்கப்பட்டுள்ளது. அது குறித்து நாளிதழ் ஆசிரியர் ஒருவருக்கு கடிதம் எழுதும்படியும் வினாத்தாளில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.