Show all

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது!

ஒன்றிய ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, எப்படி மாற்றுக் கட்சி ஆட்சிகளை கவிழ்ப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆக மனநிறைவோடே உள்ளேன், யார் எதிரி என்று மக்கள் புரிந்துகொள்வார்கள் என்கிறார் முன்னாள் முதல்வர் ஆகிவிட்ட நாராயணசாமி,

10,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் நாராயணசாமி, ஒன்றிய பாஜக அரசு மற்றும் துணைநிலை ஆளுநர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு நான்கு ஆண்டுகள் செய்த பணிகளையும், திட்டங்களையும் எடுத்துரைத்தார். 

ஒன்றிய ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, எப்படி மாற்றுக் கட்சி ஆட்சிகளை கவிழ்ப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆக மனநிறைவோடே உள்ளேன், யார் எதிரி என்று மக்கள் புரிந்துகொள்வார்கள். இக்கட்டான சூழலில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி என்று கூறி அவரது உரையை முடித்துக்கொண்டார். 

இதனிடையே, நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், முதல்வர் நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்ததாக சட்டப்பேரவையின் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதனால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. 

நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியால் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினர். அதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு விரைந்துள்ள நாராயணசாமி தனது பதவி விலகல் கடிதத்தை அளிக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.