Show all

கொரோனா தொற்றைக் குணமாக்கிட! சித்த மருத்துவத்தால் சாத்தியமா? நடுவண் அரசுக்குக் கேள்வி. அவசர வழக்கில் சென்னை உயர்அறங்கூற்றுமன்றம்

கொரோனாவைச் சித்த மருத்துவத்தால் குணமாக்க முடியுமா? நடுவண் அரசு உடனடியாக பதில் அளிக்க சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் கவனஅறிக்கை.

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனாவைச் சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா என ஆய்வு செய்யக் கோரிய மனுவுக்கு, நடுவண், மாநில அரசுகளும், இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் பதிலளிக்க சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றுக்கு 20 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 700 பேர் இந்நோயின் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நோயைக் குணப்படுத்த இதுவரை மருந்தோ, தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்காத நிலையில், சித்த மருத்துவத்தில் இந்நோயை குணப்படுத்த முடியுமா என ஆய்வு செய்ய இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு உத்தரவிடக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த முத்துகுமார் நாயக்கர் என்பவர் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் பொது நல மனுவைத் பதிகை செய்துள்ளார்.

அந்த மனுவில், சித்த மருத்துவத்தில் வீரம், பூரம், கலிங்கம், பாதரசம், செந்தூரம், அரிதாரம், கேட்டம் உள்ளிட்ட ஒன்பது வகை நச்சுக்களை சேர்த்து மருந்தாக சிறிது அருந்தினாலே, அனைத்து வகையான நுண்ணுயிரிகளும் அழிக்கப்பட்டு விடும் எனக் குறிப்பிட்டுள்ளார். சித்த மருத்துவ முறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்த முடியுமா என பரிசோதிக்கும்படி நடுவண், மாநில அரசுகளுக்கு மனுக்கள் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த அறங்கூற்றுவர்கள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, நடுவண் மற்றும் மாநில நலங்குத் துறை செயலாளர்களும், ஆயுஷ் அமைச்சக செயலாளரும், நடுவண் சித்த மருத்துவ ஆராய்ச்சி கழகமும் நான்கு கிழமைகளில் பதிலளிக்கும்படி, உத்தரவிட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.