Show all

இந்தியாவின் கொரோனா பரவல்தடைக்கான முழக்கமாகட்டும்! கொரோனாவை அடையாளம் காட்டி சிகிச்சைபெற- அஞ்சவோ, வெட்கப்படவோ தேவையில்லை

மருத்துவமனை மூடல். ஒட்டுமொத்த ஊரே கொரோனா சமூகப்பரவல் தொற்றில் பாதித்துள்ள அவலம். கொரோனாவை அடையாளம் தெரிவிக்காமல் சிகிச்சை பெற்றவரால் வந்த வினை. ராஜஸ்தானில் ஒரு தனியார் மருத்துவமனையில் தொடங்கியது.

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ராஜஸ்தானில் ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு 52 அகவை நபர் ஒருவர் நிமோனியா (கொரோனாவின் முழுவீச்சு) பாதிப்புடன் கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு மூச்சுத்திணறலும் இருந்தது.

பில்வாராவில் உள்ள பிரிஜேஷ் பங்கார் நினைவு மருத்துவமனையில், இந்தப் புதிய நோயாளியை 58 அகவை டாக்டர் அலோக் மிட்டல் பரிசோதனை செய்திருக்கிறார். நோயாளி வெளிநாடு சென்று வந்தாரா என்பது பற்றி யாரும் கேட்கவும் இல்லை, அவராகவும் சொல்லவும் இல்லை. தீவிர சிகிச்சைப்பிரிவில் வேறு 6 நோயாளிகளும் இருந்தனர்.

நோயாளியின் உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. இரண்டு நாட்கள் கழித்து, சிறப்புச் சிகிச்சைக்காக, 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜெய்ப்பூரில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு நோயாளியை அனுப்பிவைத்தனர்.

ஜெய்ப்பூரில் இரண்டு மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெய்ப்பூரிலும், நிமோனியா பாதித்த அந்தநோயாளிக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்படவில்லை. அவருடைய உடல்நிலை வேகமாக மோசமடைந்து, சில நாட்கள் கழித்து மார்ச் 13 அன்று இறந்து போனார்.  அவருடைய மரணம்பற்றி டாக்டர்மிட்டல் மற்றும் அவருடைய குழுவினருக்குத் தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 9 அன்று வெளியான தகவல்களின்படி, டாக்டர் மிட்டலும், வேறு சிலரும் உதய்பூருக்குச் சென்று ஒரு சொகுசு விடுதியில் ஹோலி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நிமோனியா நோயாளி மரணம் அடைந்த பல நாட்களுக்குப் பிறகு, டாக்டர் மிட்டலும் அவருடைய சகாக்களும் தாங்களாகவே ஓர் அரசு மருத்துவமனையில் தனிமைப் படுத்த பிரிவில் பரிசோதனை செய்துகொண்டனர். அடுத்த சிலநாட்களில், அந்த மருத்துவமனையைச் சேர்ந்த மேலும் சில சகாக்கள் அவர்களுடன் தனிமைப்படுத்தல் சிகிச்சையில் சேர்ந்துகொண்டனர். டாக்டர் மிட்டல் உள்பட அவர்களில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அந்தத் தனியார் மருத்துவமனை அந்தப் பகுதியில் பேரறிமுகமான மருத்துவமனை. அங்கு செல்வதை பலரும் வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளனர். ஏராளமான புறநோயாளிகள் அங்கு சிகிச்சை பெறுகின்றனர். மக்கள் பதட்டமாகி, நோய்த் தொற்றை மருத்துவர்கள் பரப்பிவிட்டதாகக் குற்றஞ் சாட்டத் தொடங்கியதும் நிர்வாகத்தினர் அதிவேகமாகச் செயல்படத்தொடங்கினர்.

பில்வாராவுக்குள் யாரும் வருவதற்கும், உள்ளிருந்து வெளியேறவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அங்கே ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. மக்கள் வீடுகளிலிருந்து வெளிவரவும், பொது இடங்களில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அலுவலகங்கள் மூடப்பட்டன.

மாவட்டத்துக்குள் யாரும் வரவோ அல்லது மாவட்டத்திலிருந்து வெளியேறவோ தடை விதிக்கப்பட்டது. அந்தத் தனியார் மருத்துவமனைக்கு முத்திரை வைக்கப்பட்டது.

அங்கிருந்த 88 நோயாளிகள் அதே பகுதியில் உள்ள வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். நிலைமை தீவிரமாக இருப்பதாகவும், இது தீவிர நோய்த்தொற்று பாதிப்பாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியதாகவும் செய்தி வெளியானது.

எனவே, தீவிர நோய்த்தொற்று அச்சத்தில் இருக்கும் பில்வாராவில், பின்னாளில் இந்தியா முழுக்க செய்யப்பட்ட நடவடிக்கைகள் முன்னதாகவே எடுக்கப்பட்டது. எனவே 400,000 மக்கள்தொகை கொண்ட இந்த நகரம், துகில் வணிக மையமான இந்த நகரம், இந்தியாவின் கொரோனா தொற்றுப் பரவலின் முதலாவது இடமாக மாறிவிடுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை வரையில் பரிசோதிக்கப்பட்ட 69 பேரில், மருத்துவர்கள், துணை மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட  24 முதல் 58 அகவைக்கு உள்பட்ட 13 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மூவர் மருத்துவர்கள், 9 பேர்கள் நலங்குப் பணியாளர்கள். 31 பேர்கள் மருத்துவமனை பணியாளர்கள் என்று அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையில் உள்ளனர். 

பிப்ரவரி 20க்கும், கடந்த வாரம் தனிமைப் படுத்தல் பிரிவுக்குச் செல்லும் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில், டாக்டர் மிட்டலும் அவருடைய மருத்துவர்கள் குழுவினரும் மருத்துவமனையில் 6,192 நோயாளிகளைப் பார்த்துள்ளனர். அவர்கள் ராஜஸ்தானின் 13 மாவட்டங்களிலிருந்து சிகிச்சைக்கு வந்தவர்கள். அதில் 39 நோயாளிகள் நான்கு பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 

பில்வாரா மருத்துவமனையிலிருந்து பரந்த எல்லைகள் அளவில் சமுதாய அளவில் நோய்த்தொற்று பரவியிருப்பதற்கு வாய்ப்பு இருப்பது உண்மைதான் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். பில்வாரா நகரம் முழுக்க 300 குழுக்களாக அரசுப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். சுமார் 78,000 வீடுகளின் கதவுகளை அவர்கள் தட்டுகிறார்கள்.

வெளிநாட்டில் இருந்து விருந்தினர் யாரும் வந்திருந்தார்களா, அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதா அல்லது இந்த நோய்த்தொற்று பாதிப்பு யாருக்காவது உறுதி செய்யப்பட்டதாகத் தகவல் தெரியுமா என்று அவர்கள் விசாரிக்கிறார்கள்.

இதற்கிடையில், இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போல, இந்த நகரில் வாழும் மக்களும் நீட்டிக்கப்பட்ட முடக்கநிலை மற்றும் ஊரடங்கிற்கு ஆட்பட்டுள்ளனர். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.