சனியன்று பதிகை செய்யப்பட்ட வரவு-செலவுத்திட்டத்தில், இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியின் பாதுகாப்புக்காக இந்த ஆண்டு மேலும் 60கோடி கூடுதலாக்கப்பட்டு 600 கோடி ரூபாய் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சனியன்று பதிகை செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ் இலக்கிய மேற்கோள்களோடு இந்த வரவு-செலவுத்திட்டத்தைப் பதிகை செய்தார். ஒன்றிய அரசின் இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு வழக்கம் போல ஆளுங்கட்சியினரும், கூட்டணிக் கட்சியினரில் சிலரும் ஆதரவாகவும், எதிர்க்கட்சியினர் அனைவரும் எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் பொதுப்பார்வையாளர்களும், பொருளாதார அறிஞர்களும் அதிருப்தி தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில், நேற்றைய வரவு-செலவுத்திட்டத்தில் இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியின், ‘சிறப்பு பாதுகாப்பு படை’ பாதுகாப்புக்காக, மட்டும் 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன். கடந்த ஆண்டு தலைமைஅமைச்சர் மோடியின் பாதுகாப்புக்கு 540 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது அதில் இந்த ஆண்டு 60 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவே அதற்கு முந்தைய ஆண்டு 420 கோடி ரூபாயாக இருந்தது. இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு, அவரது குடும்பத்தினரான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு இதே ‘சிறப்பு பாதுகாப்பு படை’ பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 28 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த பாதுகாப்பைத் திரும்பப் பெற்றது ஒன்றிய அரசு. தற்போது அவர்களுக்கு ‘நடுவண் தனிக்காவல்துறை படை’ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் ‘சிறப்பு பாதுகாப்பு படை’ பாதுகாப்புக் குழு கொண்ட ஒரே மனிதர் தலைமைஅமைச்சர் மோடிதான். அவரின் பாதுகாப்புக்கு மட்டும் 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் தலைமைஅமைச்சர் இந்திரா காந்தி, தன் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட பிறகே தலைமைஅமைச்சருக்கு எனத் தனிச் சிறப்பு பாதுகாப்புப் படை தேவை என்பதாக, அப்போது முதல் இந்தியாவின் தலைமைஅமைச்சருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறதாம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



