உச்சஅறங்கூற்றுமன்றம் அருகே 144 தடை உத்தரவு. ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாருக்கு, 25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: உச்சஅறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் மீது அவருடைய வீட்டில் உதவியாளராக பணியாற்றிய பெண் ஊழியர் பாலியல் புகார் அளித்தார். உச்சஅறங்கூற்றுவர் பதவி விலகி விசாரணைக்கு வழிவிட வேண்டும் என்று வழக்கறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், தன் வீட்டில் உதவியாளராக பணியாற்றிய பெண் ஊழியரின் பாலியல் குற்றச்சாட்டை மறுத்ததோடு அந்தப் பெண்ணின் புகாரின் பின்னணியில் சில பெரிய சக்திகள் இருப்பதாக கூறினார் இரஞ்சன் கோகாய். மேலும் அந்தப் புகார் பற்றி விசாரிக்க அவரே அறங்கூற்றுவர் எஸ்.ஏ.போப்டே தலைமையில் அறங்கூற்றுவர்கள் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய மூவர் குழுவை நியமித்தார். இந்தக் குழுவின் முன்பு விசாரணைக்காக அணியமாகுமாறு புகார் கூறிய பெண் ஊழியருக்கு கவனஅறிக்கை அனுப்பப்பட்டது. புகார் கூறிய பெண், இந்தக் குழுவின் கவனஅறிக்கைக்கு பதில் அளித்த கடிதத்தில் என்.வி.ரமணா குற்றம் சாட்டப்பட்ட தலைமை அறங்கூற்றுவரின் குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்றும், தன்னுடைய புகாரை இந்த குழு நியாயமாக விசாரிக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து அறங்கூற்றுவர் என்.வி.ரமணா மூவர் குழுவில் இருந்து விலகினார். எனவே அவருக்கு பதிலாக அறங்கூற்றுவர் இந்து மல்கோத்ரா நியமிக்கப்பட்டார். எஸ்.ஏ.போப்டே தலைமையில் இந்து மல்கோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் குழுவில் அமைந்தனர். ஒரு கிழமை கால விசாரணையில் பாலியல் குற்றச்சாட்டுக்கான முகாந்திரம் இல்லை என்று கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது அந்த மூவர் குழுவால். இந்நிலையில், பாலியல் புகார் தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என உச்சஅறங்கூற்றுமன்றத்தின் வெளியே வழக்கறிஞர்களும் சமூக ஆர்வலர்களும் போராட்டம் நடத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்று உச்சஅறங்கூற்றுமன்றத்தை ஒட்டிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,146.
முறையான நடவடிக்கை இன்மையைக் கண்டித்து வழக்கறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் போராட்டம்!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.